பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களில் 35 பேரை காணவில்லை என்று உச்சநீதிமன்றத்தின் லாகூர் பிரிவில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர்கள் பற்றிய விவரங்களை அளிக்க பாதுகாப்பு துறை செயலாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அப்போது, டாக்டர்களின் அறிவுரைப்படி பாதுகாப்பு துறை செயலாளர் ஓய்வில் இருப்பதால், காணாமல் போனவர்களை ஒப்படைக்க கால அவகாசம் வேண்டும் என்று அரசு கூடுதல் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கினை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திஹார் சவுத்திரி தலைமையில் மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு விசாரித்தது. அப்போது அவர்கள் கூறியதாவது:-
காணாமல் போனவர்களை ஒப்படைக்க பாதுகாப்புதுறை நிர்வாகம் தவறியுள்ளது. சட்டவிரோதமாக அவர்களை ராணுவம் அடைத்து வைத்திருக்க அனுமதி கிடையாது. அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இனியும் அவர்களை காணாமல் போனவர்கள் என்று கூறமுடியாது.
நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் படி நடக்க கடமைப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு துறையை வைத்திருக்கும் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அல்லது நீதிபதிகள் முன் நேரில் ஆஜர்படுத்தவேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிரதமர் நவாஸ் ஷெரிப்பிற்கு வேறுவாய்ப்புகள் ஏதும் இல்லாததால், காணாமல் போனவர்களை இன்று நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார் என்று மூத்த வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக