புதன், நவம்பர் 27, 2013

வங்கதேசம்: தேர்தல் இழுபறி..

வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஐந்தாண்டு ஆட்சி நிறைவு பெற்றதால் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் குறிப்பிட்டது. 

பதவிக்காலம் முடிந்த ஹசீனா தலைமையில் தேர்தல் நடைபெறக்கூடாது என்றும், இடைக்கால அரசு ஒன்று நியமிக்கப்பட்டு அந்த சமயத்திலேயே புதிய பிரதமர் முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஷேக் ஹசீனாவும் பதவியிலிருந்து விலகினார்.

ஆயினும், தொடர்ந்து அவரே இடைக்கால அரசின் தலைவராகச் செயல்படுவதை எதிர்த்த வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவரான கலிதா ஜியாவின் தலைமையிலான 21 கட்சிகளும், ஜமாத்-இ-இஸ்லாமியக் கட்சியினரும் இரண்டு நாட்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் சம்மதமில்லாத இந்தப் பொதுத் தேர்தலை கம்யூனிஸ்ட் கட்சியும் நிராகரிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் தள்ளி வைக்கப்படலாம் என்று அந்நாட்டின் தேர்தல் கமிஷன் இன்று தெரிவித்துள்ளது. கட்சிகளின் மத்தியில் கருத்தொற்றுமை இல்லாவிடில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு அனைத்துக் கட்சிகளும் பங்கெடுக்கும் வகையில் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் முகமது ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக