செவ்வாய், நவம்பர் 26, 2013

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்..


தாய்லாந்து பிரதமராக யிங்லக் ஷினாவத்ரா பதவி வகிக்கிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரது அண்ணன் தக்ஷின் ஷினாவத்ரா ராணுவ ஆட்சி கவிழ்ப்பினால் பதவி இழந்தார்.

தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்க தற்போது அவர் வெளிநாட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் நாடு திரும்ப வழி வகுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மன்னிப்பு மசோதாவை யிங்லக் ஷினாவத்ரா கொண்டு வந்தார்.


இது கீழவையில் நிறைவேறியது. ஆனால் மேலவையில் நிராகரிக்கப்பட்டது. தனது சகோதரர் மீண்டும் நாடு திரும்ப வழிவகுக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ள பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தலைநகர் பாங்காக்கில் கடந்த 7 நாட்களாக நடந்து வரும் இந்த போராட்டம் நேற்று தீவிரம் அடைந்தது. பாங்காக்கில் சனம்லுவாங் பகுதியில் உள்ள ஜனநாயக நினைவு சின்னத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு பேரணி புறப்பட்டது.

அதில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 13 அரசு அலுவலகங்கள் மற்றும் டெலிவிஷன் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையொட்டி பாராளுமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆனால் அதையும் மீறி போராட்டக்காரர்கள் நிதித்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகங்களின் வாசற் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து முற்றுகையிட்டனர்.

உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் ஓடிவிட்டனர். அதைத் தொடர்ந்து அந்த அலுவலகங்களை கைப்பற்றினர். பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா பதவி விலக வேண்டும். 'ராணுவம் வரவேண்டும்' என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் வலுவடைந்தததை தொடர்ந்து பிரதமருக்கும், அவரது அரசுக்கும் நெருக்கடி முற்றியுள்ளது. எனவே தலைநகர் பாங்காங்க் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா பிறப்பித்துள்ளார்.

பொதுமக்களின் இந்த போராட்டத்துக்கு எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பொதுமக்களின் எழுச்சிமிகு போராட்டத்தால் தாய்லாந்து அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக