வியாழன், நவம்பர் 07, 2013

பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரமாட்டோம்: தேசிய மாநாட்டுக் கட்சி அறிவிப்பு!

ஸ்ரீநகர்: தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கூட்டணி சேர மாட்டோம் என ஜம்மு-கஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். கஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த நாள் ஒருபோதும் வராது. எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனை ஏமாற்ற மாட்டோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக வாஜ்பாய் இருந்த போது அந்தக் கூட்டணியில் இருந்தோம். தற்போதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவர் தலைமை வகித்து இருந்தால் கூட்டணி ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என உமர் அப்துல்லா பேசினார்.
இதற்கிடையில், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லாவின் இளைய சகோதரரும் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷேக் முஸ்தபா கமால் கூறியதாவது:
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலை சம்பவத்திற்கு அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடிதான் பொறுப்பாவார். காங்கிரஸ் கட்சியுடன் கருத்துவேறுபாடு இருந்தாலும், மதசார்பின்மை கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தேசிய மாநாட்டுக் கட்சி அங்கம் வகிக்கிறது என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக