ஜேர்மன், பிரேசில் ஆகிய நாடுகளை தொடர்ந்து ஜப்பானையும் அமெரிக்கா உளவு பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள 35 நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்த தகவலை எட்வர்டு ஸ்னோடென் வெளியிட்டார்.
குறிப்பாக ஜேர்மன், பிரான்ஸ், பிரேசில் நாடுகளை உளவு பார்த்ததால் உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நட்பு நாடான ஜப்பானையும் அமெரிக்க உளவுத் துறை உளவு பார்த்தது தற்போது தெரியவந்துள்ளது.
இது அமெரிக்காவின் நயவஞ்சகத்தனத்தை காட்டுவதாக ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டு அரசு நேற்று வெளியிட்ட செய்தியில், நயவஞ்சகத்தனமாக அமெரிக்கா, ஜப்பானிலும் ஊடுருவி உளவு பார்த்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நியூயார்க் பத்திரிகைக்கு அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், ஸ்னோடென் வெளியிட்டுள்ள செய்திகளின்படி அமெரிக்காவின் உளவுத்துறையான என்எஸ்ஏ ஜப்பானிலும் ஊடுருவி அதனை உளவு பார்த்துள்ளது அம்பலமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல இணையதளம் ஒன்றில் என்எஸ்ஏவால் 2007ம் ஆண்டு உளவு பார்க்கப்பட்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதாரத்தில் உலகின் 3வது பெரிய நாடாக விளங்கும் ஜப்பானின் வெளியுறவுத்துறைக்குள் என்எஸ்ஏ ஊடுருவியுள்ளது கவலை அளிக்க கூடிய ஒன்றாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாதுகாப்புதுறை அமைச்சர் இட்ஸ்னோரி ஒனோடேரா கூறுகையில், வெளியான செய்திகளை வைத்து பார்க்கும் போது என்எஸ்ஏ உளவு பார்த்தது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்க அரசு நேரடியாக இதில் ஈடுபடவில்லை என்றாலும், இது விரும்பதக்க ஒன்று அல்ல. இந்த செயல் இருநாடுகளின் நட்புறவையும் பாதிக்கக் கூடிய ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக