செவ்வாய், நவம்பர் 26, 2013

அமெரிக்க தாக்குதல்: கண்டுகொள்ளாமல் விட்ட பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது வழக்கு..

பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதல் போர்க்குற்றம் என்று கடந்த மே மாதம் பெஷாவர் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்த தாக்குதலுக்குப் பிறகும் பழங்குடியினர் பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலை தடுக்க பாகிஸ்தான் அரசு தவறியதால், பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக பெஷாவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஜாமியத் உலமா-இ-இஸ்லாம்-சமி அமைப்பின் மாகாண தலைவர் மவுலானா யூசுப் ஷா, மாகாண முன்னாள் துணை சபாநாயகர் இக்ராமுல்லா சாகித் ஆகியோர் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், “ராஜதந்திர வழிகள் மூலம் ஆளில்லா விமான தாக்குதல்களை தடுக்காவிட்டால், பாகிஸ்தான் அரசு அந்த விமானங்களை சுட்டுத்தள்ள வேண்டும். ஆனால், தீர்ப்பு வெளியாகி 7 மாதம் கடந்த பின்னரும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமரும், அதிகாரிகளும் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த விஷயத்தில் நாம் விரும்பிய முடிவை கொண்டு வருவதில் தூதரக முயற்சிகள் தோல்வியடைந்தால், அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் பாகிஸ்தான் துண்டிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக