செவ்வாய், நவம்பர் 26, 2013

ஆப்கானை நிரந்தரமாக ஆக்கிரமிக்க அமெரிக்கா திட்டம்..

2014-ம் ஆண்டு நேட்டோ படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்திருந்த அமெரிக்கா, 2014-க்குப் பிறகு 2024 வரையிலும் அதற்கும் பின்னரும் 15,000 அன்னிய துருப்புகளை (அமெரிக்க படையினர் என்று அர்த்தம்) ஆப்கானிஸ்தானில் நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஆப்கன் அரசு மீது சுமத்தியிருக்கிறது. 8 மாகாணங்களில் உள்ள 9 முக்கிய இராணுவத் தளங்கள் அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும்.


ஹமீத் கர்சாய்
பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி லோயா ஜிர்காவை வலியுறுத்தும். ஹமீத் கர்சாய்.
தலைநகருக்கு வடக்கே உள்ள பாக்ராம் விமானப் படைத் தளம், தெற்கில் காந்தகார் மற்றும் ஷோராப் விமானப் படைத் தளங்கள், ஈரானுடனான மேற்கு எல்லையில் உள்ள ஹெராத் மாகாணத்தில் ஷிந்தாந்த் விமானப் படைத் தளம், பாகிஸ்தானுடனான கிழக்கு எல்லையில் உள்ள ஜலாலாபாத் மற்றும கர்தேஸ் விமானப்படைத் தளங்கள், காபூல் பன்னாட்டு விமான நிலையம், ஹெராத் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் வடக்கே மத்திய ஆசியாவில் உள்ள முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு அருகே உள்ள மஜர்-இ-ஷரீப் விமானநிலையம் ஆகியவை இந்தத் தளங்களில் அடங்கும்.
இந்த ஒப்பந்தத்தை ஆப்கானிஸ்தானின் 3,000 பழங்குடி தலைவர்களின் கூட்டமான லோயா ஜிர்காவில் வைத்து ஒப்புதல் வாங்கி பின்னர் ஆப்கான் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப் போவதாக அமெரிக்க கைப்பாவையான அதிபர் ஹமீத் கர்சாய் அறிவித்திருக்கிறார். காபூலில் தொடங்கிய பழங்குடி தலைவர்களின் கூட்டத்தில் பேசிய அவர், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி பழங்குடி தலைவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார். இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கப் படைகளை அனுமதிப்பதன் மூலம் பல லட்சம் ஆப்கன் படையினருக்கு பயிற்சி அளித்து, ஆயுதம் வழங்குவதற்கான செலவு பணம் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் என்றும் அவர் நியாயம் சொல்லியிருக்கிறார். அமெரிக்கப் படைத்தளங்களும், அமெரிக்கா தருவதாக வாக்களித்துள்ள ஆண்டுக்கு $6 பில்லியன் நிதி உதவியும் இல்லாமல் கர்சாயின் ஆப்கன் அரசு ஒரு நாள் கூட நீடிக்க முடியாது என்ற உண்மையை அவர் சொல்லவில்லை.
அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு, இப்போது அமெரிக்காவை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கும் தாலிபான்களின் அமைப்பு, பழங்குடியினத் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தால், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் துரோகிகளாக அறிவித்து கொல்லப் போவதாக மிரட்டியிருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் ஏற்றுக் கொள்ளும்படி ஆப்கான் அரசுக்கு கெடு விதித்துள்ள அமெரிக்க அதிபரின் செய்தித் தொடர்பாளர், அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் 2014-க்குப் பிறகான இராணுவத் திட்டமிடலை செய்வதற்கு அது அவசியம் என்று கூறியிருக்கிறார்.
பயிற்சி அளித்தல், ஆயுதம் வழங்குதல், உதவுதல் போன்ற பணிகளைத்தான் அமெரிக்கப் படையினர் செய்வார்கள் என்று சொல்லும் கர்சாய், அதே நேரத்தில் அமெரிக்க உயிர்களை பாதுகாப்பதற்கு ஆப்கானியர்களின் வீடுகளுக்குள் நுழையவும் அமெரிக்க இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்படும் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆப்கானிஸ்தான் அரசின் ஒப்புதலுடன் அமெரிக்கப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது. அமெரிக்கப் படையினர் மீதான வழக்குகளை விசாரிக்கும் உரிமை ஆப்கானிய நீதிமன்றங்களுக்கோ, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கோ இருக்காது. அதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமெரிக்க ராணுவமே உருவாக்கி வழக்குகளை நடத்தும். அதாவது, ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கான அனைத்து உரிமைகளையும் அமெரிக்கா பெற்றிருக்கும்.
மத்திய ஆசியாவின் எரிவாயு, எண்ணெய், அவற்றை அரபிக் கடலுக்கு கொண்டு செல்லும் குழாய் வழிப்பாதை என்று அமெரிக்காவின் பொருளாதார நலனுக்காகவும் ஆப்கானில் நிரந்தரமாக படை வைத்திருப்பது அவசியமாகிறது. மேலும் சீனா, ஈரான், மற்றும்  மத்திய ஆசிய குடியரசுகளின் எல்லைப் பகுதியான ஆப்கானிஸ்தானில் தனது நிரந்தர இராணுவ தளத்தை வைத்திருப்பதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தேவைப்படுகிறது. அதன்படி இந்தப்பகுதிகளும், பாக் – இந்தியாவும் கூட நிரந்தர போர் நெருக்கடிகளில் இருக்கப் போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக