சனி, நவம்பர் 09, 2013

யாசர் அராபத்தின் படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல்?

பாலஸ்தீனிய விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி தனது 75-வது வயதில், பிரான்ஸ் நாட்டில் இறந்தார். ஆனால், அவரது உடல் அப்போது பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

ஆனால், 2006-ம் ஆண்டில் ரஷ்யாவின் முன்னாள் உளவுத்துறை பிரிவினரும், ரஷ்ய அரசின் விமர்சகருமான அலெக்சாண்டர் லிட்வினென்கோ படுகொலை செய்யப்பட்டபின், அராபத்தும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதனால், 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவரது உடற்பகுதியில் எஞ்சியிருந்த பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளிலும் இந்த சோதனைகள் தனித்தனியே மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள லுசேன் சட்ட மருத்துவ மையத்தின் கதிரியக்கப் பிரிவில் பணிபுரியும் எட்டு விஞ்ஞானிகள் மொத்தம் 75 மாதிரிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு தங்களின் முடிவுகளை தெரிவித்துள்ளனர்.

இவற்றில் 38 மாதிரிகள் அராபத்தினுடையவை ஆகும். மீதி 37 மாதிரிகள் பத்து வருடங்களாக சுகாதாரமாகப் பாதுகாக்கப்பட்ட காட்டன் துணிகளின் மாதிரிகள் ஆகும். இவற்றில் அராபத்தின் ரத்தம், சிறுநீர்க் கறைகள் பட்டிருந்த துணிகளில் உயர் கதிர்வீச்சு தன்மை கொண்ட போலோனியம் படிமங்கள் இருந்ததை இந்தக் குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

ஸ்விட்சர்லாந்து நாட்டின் தடவியல் அறிக்கையை ஆய்வு செய்த யாசர் அராபத்தின் மனைவி சுஹா நேற்று பாரிஸ் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

எனது கணவர் (யாசர் அராபத்) இயற்கை மரணத்தால் உயிர் இழக்கவில்லை. அவர் போலோனியம் என்ற விஷத்தால் கொல்லப்பட்டுள்ளார் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அவரது மரணம் இயற்கையானது அல்ல. அரசியல் படுகொலை தான் என்ற எனது சந்தேகம் இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது.

இந்த படுகொலை தொடர்பாக எந்த நாட்டையும் எந்த தனிநபரையும் நான் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, யாசர் அராபத்தின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணையும், ஆராய்ச்சியும் மேற்கொண்டுள்ள பாலஸ்தீனிய தடயவியல் துறை வல்லுனர் தவ்பீக் திராவி, யாசர் அராபத்துக்கு இயற்கையான மரணம் சம்பவிக்கவில்லை என்று ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம்.

எங்கள் சந்தேகம் சரியானதுதான் என்பதை ஸ்விட்சர்லாந்து நாட்டின் தடவியல் வல்லுனர்கள் நிரூபித்துள்ளனர்.

இஸ்ரேல் தான் யாசர் அராபத்தின் படுகொலைக்கு மூல, முதல், சந்தேகத்துக்குரிய காரணம் என நான் கருதுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக