காஸ்ஸா சிட்டி: காஸ்ஸாவில் கட்டிட நிர்மாணப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ள சூழலில் அங்கு கட்டுமான திட்டங்களை ஐ.நா. நிறுத்திவிட்டது. 20 திட்டங்களை நிறைவேற்ற ஐ.நா. திட்டமிட்டிருந்தது. இதில் 19 திட்டங்களை நிறுத்திவிட்டதாக ஐ.நா.வின் துயர்துடைப்பு ஏஜன்சிஅறிவித்துள்ளது.
காஸ்ஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு 2.5 கி.மீ. சுரங்கம் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. தங்களுடைய பகுதிகளில் தாக்குதல் நடத்த காஸ்ஸா போராளிகள் முயற்சிக்கிறார்கள் என்பதற்கான அறிகுறி என்று குற்றம் சாட்டி கட்டுமான பொருட்களை காஸ்ஸாவிற்கு இறக்குமதி செய்வதை இஸ்ரேல் தடுத்துவிட்டது.
3 வாரங்கள் கழிந்த பிறகும் காஸ்ஸாவிற்கு இறக்குமதி செய்ய இஸ்ரேல் அனுமதி வழங்கவில்லை. இச்சூழலில் இத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்று ஐ.நா ஏஜன்சியின் காஸ்ஸாவிற்கான இயக்குநர் ராபர்ட் டர்னர் தெரிவித்துள்ளார்.
12 பள்ளிக்கூடங்கள் மற்றும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு பாலத்தின் வேலை மட்டும் நடைபெற்று வருகிறது. தடையை உடன் நீக்கமாட்டோம் என்று இஸ்ரேல் அரசு செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.
காஸ்ஸா எல்லையில் உள்ள சுரங்கங்களை எகிப்து மூடியதால் காஸ்ஸாவின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாக டர்னர் கூறுகிறார். 30 சதவீதம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
எகிப்தின் முதல் ஜனநாயக அதிபர் முஹம்மது முர்சியை ராணுவ சதிப்புரட்சி மூலம் கவிழ்த்து விட்டு ஆட்சியை சட்டவிரோதமாக கைவசப்படுத்திய ராணுவ சர்வாதிகார அரசு காஸ்ஸா-எகிப்து எல்லையை மூடிவிட்டது.
இதன் பின்னர் எல்லையில் உள்ள சுரங்கங்களை காஸ்ஸா மக்கள் நம்பியிருந்தனர். இதனையும் எகிப்தின் சர்வாதிகார ராணுவ அரசு மூடிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக