வியாழன், நவம்பர் 14, 2013

அப்துல் நாஸர் மஃதனியை விடுவிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை!

புதுடெல்லி: மூன்று ஆண்டுகளாக அநியாயமாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி. கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை விடுதலை செய்ய வேண்டும் என்று டெல்லியில் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தான் செய்த குற்றம் என்னவென்று தெரியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளின் சின்னமே அப்துல் நாஸர் மஃதனி என்று ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேஷனின் பிரதிநிதி மனீஷா சேத்தி கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸ் ரிக்கார்டில் எவ்வித குற்றங்களும் செய்ததாக பதிவு செய்யப்படாத 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிமி இயக்க உறுப்பினர் என்பதுதான் இவர்கள் மீதான குற்றம் என்று அவர் கூறினார்.
ஜோடிக்கப்பட்ட வழக்குகளின் பெயரால் துன்புறுத்தப்படும் ஆயிரக்கணக்கான நிரபராதிகளில் முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடியினர், கிறிஸ்தவர்கள் ஆகியோர் பெரும்பான்மையானவர்கள் என்று ஃபாதர் ஜோஸ் சேவியர் குற்றம்சாட்டினார்.
நிரபராதிகளை சிறையில் அடைக்க உபயோகிக்கும் யு.ஏ.பி.ஏ. போன்ற கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான எதிர்ப்பு உருவாக வேண்டும் என்று இந்தியன் சோசியல் ஆக்ஷன் ஃபாரம் ஸ்தாபகர் அனில் சவ்தரி கூறினார்.
அரசுகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் இரைகள்தாம் அப்துல் நாஸர் மஃதனியை போன்றவர்கள் என்று எலிஸபத் ஃபிலிப் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக