ஞாயிறு, டிசம்பர் 29, 2013

பேஸ்புக் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யப் படுவது கட்டுப்படுத்தப் படும்: பிரவீன்குமார்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற அனைத்துக் கட்சி கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். மேலும், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யப் படுவது கட்டுப்படுத்தப் படும் என அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தலைமையில் நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில்... அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது, அவர்கள் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், திமுக சார்பில் நேர்மையான தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், தேமுதிக பிரதிநிதி சந்திரகுமார் சார்பில் தங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு மத்திய அரசின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப் பட்டது. இக்கூட்டத்திற்குப் பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒரேகட்டமாக நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தல் எவ்வித மாற்றமும் இல்லை. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யப்படுவது கட்டுப்படுத்தப்படும். புதுப்புது வழிகளில் வாக்காளர்களுக்கு பணம் தர வாய்ப்பு உள்ளதாகவும் புகார் வந்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக