வெள்ளி, டிசம்பர் 20, 2013

ராஜ்நாத்சிங்குடன் அன்புமணி சந்திப்பு!

டெல்லி: பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் வலுவான அணி அமைக்கும் முயற்சியில் அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 15-ந் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அக்கட்சி அறிவித்தது. இதன் மூலம் வரும் தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக தலைமையில் 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் ஈடுபட்டுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்த கடந்த வாரம் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் வைகோ சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணிக்கு வைகோ சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து பாஜக மற்றும் பாமக தலைவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காவிட்டாலும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க அன்புமணி சம்மதம் தெரிவித்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. மதிமுக, பாமகவைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சியின் இளைஞரணிச் செயலர் எல்.கே. சுதீஷ் ஆகியோரிடமும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். தங்கள் அணியில் தலித் கட்சி ஒன்றை இணைக்க முயற்சி மேற்கொண்டுள்ள பாஜக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடமும் பேசியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக