திங்கள், டிசம்பர் 09, 2013

சாராய வியாபாரி ஜெயலலிதா மற்றும் கருணாநிதி -க்கு மாணவி கடிதம்

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்று தமிழக மக்களை நாசப்படுத்திவரும் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு சட்டமாணவி எழுதும் பகிரங்கக் கடிதம்.
நாள்: 06.12.2013
அனுப்புநர்: ஆ.நந்தினி, நான்காம் ஆண்டு பி.ஏ.பி.எல், அரசு சட்டக்கல்லூரி, மதுரை-625020.
பெறுநர்: செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள், தமிழக முதல்வர் & அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர், வேதி நிலையம், 81/36 போயஸ் கார்டன், சென்னை-600086.

தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்.மதுவால் அப்பாவைப் பறிகொடுத்த 100 மாணவர்களோடு உங்களை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 01.11.2013 அன்று கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு தங்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை."ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் அதை செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் மோசமாகிவிடும்"- என அரசியல்சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் சொன்னது யாருக்குப்பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் 100% பொருந்தும். நீங்கள் இருவரும் தானே தமிழக மக்களைத் திட்டமிட்டு குடிக்கு அடிமைப்படுத்தி, பல லட்சம் குடும்பங்களை நாசப்படுத்திய குற்றவாளிகள்!ஆம், நீங்கள் இருவரும் கொடிய குற்றவாளிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராகவே இக்கடிதத்தை எழுதுகிறேன். எந்தக் குற்றமும் செய்யாத மூன்று கோவை வேளாண் கல்லூரி மாணவிகளை 2000 ஆவது ஆண்டு உங்களது அடியாட்கள் பேருந்தோடு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திப் படுகொலை செய்தார்களே? அதை விடவா பெரிய தண்டனையை எனக்குத் தந்துவிட முடியும்?நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த அந்தக் கோரச் சம்பவம் என் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது. இன்றுவரை, அச்சம்பவத்துக்கு ஒரு வருத்தம் கூட நீங்கள் தெரிவிக்கவில்லை. இந்தளவுக்கு கொடூரமனம் படைத்தவராக இருப்பதால் தான் மதுவால் அப்பாவைப் பறிகொடுத்து அவதிப்படும் குழந்தைகளின் வேதனை உங்களுக்குப் புரியவில்லை.சாராயத்தையும், ஊழல் பணத்தையும் வைத்து மக்களை அடிமையாக்கி அரசியல் செய்வதில் நீங்களும் கருணாநிதி அவர்களும் ஒன்று தான். திருமங்கலம், பென்னாகரம் இடைத்தேர்தலில் அவர் என்ன செய்தாரோ அதைத்தானே நீங்களும் ஏற்காட்டில் செய்திருக்கிறீர்கள்.தமிழக முதல்வரே! டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அன்றாடம் ஏராளமான குடும்பங்களின் சாபத்தையும் பாவத்தையும் நீங்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மதுவிற்பனை அதிகரிக்க, அதிகரிக்க உங்களது பாவக்கணக்கும் அதிகரிப்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக, ஒருநாள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது. நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவது? தூக்குதண்டனை கூடப் போதாது. அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும்.
சட்டத்தில் இருந்து தப்புவது உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் என்றுமே தப்பிக்க முடியாது.
இப்படிக்கு,
ஆ.நந்தினி.
நகல்: 1. திரு.மு.கருணாநிதி அவர்கள்,முன்னாள் தமிழக முதல்வர். 2. தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள். 3. ஊடகங்கள். 4. தமிழக மக்களுக்கு..
நந்தினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக