சனி, டிசம்பர் 07, 2013

முசாபர் நகர் அகதிகள் முகாமில் 40 பேர் மரணம்

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு முஸஃபர்நகர் மற்றும் சியாங்கிலியில் தஞ்சமடைந்திருக்கும் அகதிகள் முகாமில் கடுமையான குளிர் மூலம் 40 க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலோர் குழந்தைகள் ஆவர். கலவரத்தை தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் பின்னர் குற்றவாளிகளை பிடிப்பதிலும் தோல்வியை தழுவிய அரசு, இங்கேயும் தனது கையாலாகத் தனத்தை வெளிப்படுத்துகிறது. குளிர் மூலம் யாரும் மரணிக்கவில்லை என்று கூறும் அதிகாரிகள், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாம்களில் குளிரில் இருந்து பாதுகாக்க கம்பளிப் போர்வைகளை வழங்க தயாரில்லை. மாறாக....
எத்தனை முகாம்களை இழுத்து மூடலாம் என்று அவர்கள் கணக்கெடுத்து வருகின்றார்கள். கடும் குளிருக்கு பலியான தனது நான்கு வயதான மகள் குஷ்னுனாவை அவரது தாயார் மஹ்பூபா அடக்கம் செய்யும் காட்சியை கண்டதாக சியாங்கிலி மாவட்டத்தில் உள்ள மலக்பூர் அகதிகள் முகாமிற்கு சென்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் கூறுகிறார். குளிரால் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு குஷ்னூனா மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார்.200 க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ள சுனேத்தியில் உள்ள முகாமிலும் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இர்ஃபான் என்பவரின் மகள் ஃபாத்திமா கடந்த புதன்கிழமை நிம்மோனியா பாதித்து மரணமடைந்துள்ளார். கடந்த மாதம் மலக்பூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள முர்ஷிதா என்பவரின் பிஞ்சுக் குழந்தை மரணித்துள்ளது. முகாம்களில் பிறப்பு-இறப்பு புள்ளிவிபரங்களை நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பதிவுச் செய்கின்றனர். மலக்பூரில் செப்டம்பர் முதல் 26 பேர் மரணித்துள்ளதாக நிவாரணக் குழுவில் உறுப்பினரான குல்ஷாத் சவுத்ரி தெரிவித்தார். இதில் 24 பேர் குழந்தைகள் ஆவர். தாபரி, குர்த், பர்ணாவி ஆகிய முகாம்களில் நான்கு குழந்தைகள் இறந்துள்ளனர். லோயி முகாமில் ஐந்து பிஞ்சுக் குழந்தைகள் உள்பட 17 குழந்தைகளும் ஜோலாவில் உள்ள அகதிகள் முகாமில் மூன்று பிஞ்சுக் குழந்தைகள் உள்பட ஐந்து குழந்தைகளும் மரணித்துள்ளன. பாசிக்கலா முகாமில் நான்கு பேர் மரணித்துள்ளனர். நவம்பர் துவக்கம் முதல் அரசு இங்கு நிவாரணப் பொருட்கள் எதுவும் விநியோகிக்கவில்லை என்று முகாமை நடத்துபவர்கள் கூறுகின்றனர். சுகாதாரத்தை பேணுவதற்கான வசதிகளையும் அரசு திரும்ப பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக