திங்கள், டிசம்பர் 16, 2013

ஹிந்துத்துவவாதிகளின் பிடியில் மத்திய உள்துறை அமைச்சகம்! – சமூக ஆர்வலர்கள்

புதுடெல்லி: இந்தியாவில் அதிகார மையங்கள் காவிமயமாக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், மத்திய அமைச்சகமும் கிட்டத்தட்ட ஹிந்துத்துவா சக்திகளின் பிடியில்தான் உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும் முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்படுவது தொடருவதற்கு காரணம் இதுவாகும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் பா.ஜ.க.வில் சேர்ந்தது இதற்கான தெளிவான ஆதாரமாகும். உள்துறை அமைச்சகம் தவிர இதர துறைகளிலும் இதே நிலைதான் காணப்படுவதாக சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார்.
காவி உள்ளம் படைத்த அதிகாரிகள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை தகர்க்கின்றார்கள். கடந்த பத்தாண்டுகளாக ஏன் முஸ்லிம் இளைஞர்கள் எக்காரணமுமின்றி துன்புறுத்தப்படுகின்றார்கள் என்பது குறித்து அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார்.“ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் இதில் சம பங்குண்டு. முக்கிய பதவிகளில் இருப்பது யார் என்பது தெரியாவிட்டால், இப்படியொரு அரசால் என்ன பலன்? இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தட்டவர்களிடம் விவாதித்த போதும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை” என்று ஷப்னம் ஹாஷ்மி குற்றம் சாட்டுகிறார்.மனித உரிமை ஆர்வலர் சுரேஷ் கைர்னார் இது குறித்து கூறியது: “காவி மனம் படைத்தவர்கள் அரசு கட்டமைப்புகளில் ஊடுருவ துவங்கி பல வருடங்களாகிவிட்டன. அவர்கள் மெதுவாக விஷத்தை பரப்புகிறார்கள். முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் மட்டுமல்ல, முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங்கும் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டார். ஆர்.எஸ்.எஸ்.ஸும், பா.ஜ.க.வும் விதைத்ததன் பலனை அறுவடை செய்கின்றார்கள். இடதுசாரிகளும், மதசார்பற்ற சக்திகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய வேளை இதுவாகும்.” இவ்வாறு கைர்னார் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக