திருச்சி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டு இடங்களில் போட்டியிட பரிசீலிக்கும் பணி நடைபெற்று வருவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.இது குறித்து அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது."முஸ்லிம் லீக் கட்சிக்கு தேசிய அளவில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்து முதல் முறையாக இóந்தத் தேர்தலில் தனித்த அடையாளத்துடன் ஏணி சின்னத்தில் போட்டியிட இருக்கிறோம். எனவே, தமிழ்நாட்டில் இரு இடங்களில் போட்டியிடவும், தொகுதிகளைத் தேர்வு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் ஜனநாயக, சமயசார்பற்ற, சமூக நீதிக்கான அணியில் இடம்பெறுவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது தமிழ்நாட்டில் திமுகவுடனான அணியில் தொடர்கிறோம். திமுக தலைமையிலான அணி முடிவான பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கும்.
யாரையோ கையில் வைத்துக் கொண்டு எங்களுக்கு முஸ்லிம்களின் ஆதரவும் இருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்து வருகிறது. அதேபோல, இந்தியாவை தனி நபர் ஆள முடியாது. இந்தியாவில் கொள்கைதான் ஆள முடியும்.
தமிழ்நாட்டிலுள்ள 12,000 மஹல்லா ஜமாத்துகளின் கட்டுப்பாட்டை காப்பாற்றவும், இஸ்லாமிய மத சம்பந்தமான வழிகாட்டுதல்களையே முஸ்லிம்கள் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மஹல்லா ஜமாத்துகளின் ஒருங்கிணைப்பு மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் நாளை டிசம்பர் 28 சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டிற்கு முன் பயங்கரவாதத்தை எதிர்த்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இளம்பிறை எழுச்சிப் பேரணி கோஹினூர் திரையரங்கம் அருகிலிருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்படும். இந்த மாநாட்டில் முன்மாதிரியாகச் செயல்பட்டு வரும் 15 மஹல்லா ஜமாத்துகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன." என்று முஹம்மது அபூபக்கர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக