வியாழன், டிசம்பர் 26, 2013

மச்சில் : போலி என்கவுன்டர் ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவு

ஜம்மு : மச்சில் போலி என்கவுன்டர் வழக்கில், ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் நதிகால் கிராமத்தை சேர்ந்தவர்கள் முகமது சபி, செசாத் அகமது, ரியாஸ் அகமது. இவர்கள் கடந்த 2010ம் ஆண்டு மாயமாகினர். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போனவர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், 2010 ஏப்ரல் 30ம் தேதி, வடக்கு காஷ்மீரின் மச்சில் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நுழைய முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேரை சுட்டுக் கொன்றதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். அவர்களின் உடல்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், இது போலி என்கவுன்டர் என்பது தெரிய வந்தது. பதக்கம் மற்றும் பதவி உயர்வுக்காக, 4வது ராஜ்புத் படைப்பிரிவின் கர்னல் டி.கே.பதானியா, மேஜர் உபேந்தர் மற்றும் 4 ராணுவ வீரர்கள் சேர்ந்து 3 இளைஞர்களை வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று, இந்திய எல்லை சுட்டுக் கொன்றது அம்பலமானது. மேஜர் உபேந்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராஜ்புத் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பிலிருந்து பதானியா விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு தற்போது ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, வடக்கு பிராந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் நேற்று கூறுகையில், ‘‘மாநில போலீஸ் மற்றும் நீதித்துறை மூலமாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். இதில், சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு விசாரணை விரைவில் முடிக்கப்படும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக