புதன், டிசம்பர் 25, 2013

காங்கிரஸ் தலைவர்களின் ஊழல்களை விசாரிப்போம்: ஆம் ஆத்மி உறுதி

டெல்லி: தங்கள் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்க வேண்டாம் என்று டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. எங்களது அரசு கவிழ்ந்தாலும், காங்கிரஸ் தலைவர்களது ஊழல்கள் குறித்து விசாரிப்போம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ், கூறியதாவது: ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தபோதிலும், அக்கட்சித் தலைவர்களுக்கு எதிரான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணையை நிறுத்த மாட்டோம் என்றார். காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி எவ்வித கூட்டணியும் வைத்துக்கொள்ளவில்லை என்றும், எங்கள் கட்சியை சேர்ந்த 28 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே நம்பி உள்ளோம் என்றும் கூறிய அவர், காங்கிரஸ் தலைவர்கள் தொடர்புடைய ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும் என ஆரம்பம் முதல் தமது கட்சி கூறி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தங்கள் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்க வேண்டாம் என்றும் அவர் கூறினார். நிபந்தனைகள் இதனிடையே கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆதரவுடன் அமைந்த அரசுகள் எவ்வளவு நாட்கள் நீடித்தன என்பதை பட்டியலிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண், காங்கிரஸ் கட்சியின் எவ்வித நிபந்தனைகளையும் தங்களது கட்சி ஏற்காது என்றார். ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த செயல் திட்டங்களின்படியே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றும், காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாவும் ஒன்றாக கரம் கோர்த்து எங்களது ஆட்சியை கவிழ்த்தால், அது அந்த கட்சிகளுடைய விருப்பம் என்றும் அவர் மேலும் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக