புதன், டிசம்பர் 04, 2013

ஊருக்கு உபதேசம் : பா ஜ க வின் கிழியும் முகமூடி

"சீசரின் மனைவி மட்டுமல்ல சீசரும் சந்தேகத்துக்கு அப்பாற்ப் பட்டவராக இருக்க வேண்டும்" என்று தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பாஜகவின் மூத்தத் தலைவரும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ்."பாலியல் புகாருக்கு உள்ளான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே கங்குலி மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்" என்றும் சுஷ்மா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே கங்குலி மீது அவருடன் பணி புரிந்த பெண் வழக்கறிஞர் பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்ய ஒரு குழுவை நியமித்தார் உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம்.
குழு நடத்திய விசாரணையில் ,தாம் தவறான நோக்கத்தில் அப்பெண் வழக்கறிஞரிடம் நடந்து கொள்ள வில்லை என்றும் தம் மகள் போன்றே பாவிப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் நீதிபதி கங்குலி. இது தொடர்பாக பாதிக்கப் பட்டவர் தான் முழுமையும் அறிந்தவர். வேறு ஏதாவது சூழ்நிலைகளிலும் முன்னாள் நீதிபதி கங்குலி அதே போன்று நடந்து கொள்ள முயற்சி செய்தாரா? என்பது குறித்தும் விரிவாக தெரிவிக்க வேண்டியவர் பாதிக்கப் பட்ட பெண் வழக்கறிஞரே.2G வழக்கை விசாரணை செய்தார் என்பதன் காரணமாகவும் ஏ.கே கங்குலி மீது பாலியல் புகார் கூறப் பட்டுள்ளதாக ஒரு தரப்பு கூறி வருகிறது.முன்னாள் நீதிபதியின் மீதே பாலியல் புகார் அளிக்கப் பட்டுள்ளதால் அது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப் பட்டே ஆக வேண்டும். ஏ.கே கங்குலி தவறு செய்து இருக்கும் பட்சத்தில் அவர் கடுமையாக தண்டிக்கப் படவும் வேண்டும். விசாரணை முடியும் வரை அவர் வகித்து வரும் பதவியைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை.ஆனால், ஏ.கே கங்குலி தம் பதவியில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான் இங்கு கேள்வி!குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவை பயன்படுத்தி ஒரு பெண்ணை 24 மணி நேரமும் உளவு பார்த்ததாக குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷா மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீதும் குற்றக் சாட்டு எழுந்துள்ளது.பெண்ணின் அப்பா கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அப்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கப் பட்டது என்று பாஜக சப்பைக் கட்டு கட்டி வருகிறது. பதில் அளிக்க வேண்டிய நரேந்திர மோடியோ மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் குலைல் டாட் காம் இணையதளம் நரேந்திர மோடியுடன் அப்பெண் பேசிக் கொண்டு இருப்பது போன்ற புகைப் படத்தை வெளியிட்டுள்ளது.இதன் மூலம் உளவு பார்க்கப் பட்ட அப்பெண் பலத்த பாதுகாப்புக்கு இடையிலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நேரில் பார்க்கும் அளவுக்கு மோடியிடம் செல்வாக்கு படைத்தவர் என்பது வெளிப் பட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்தே நரேந்திர மோடிக்கு அறிமுகமாகியுள்ள அப்பெண்ணுக்கு அவரது தந்தை 2009 ஆம் ஆண்டு பாதுகாப்புக் கோர வேண்டிய அவசியமென்ன? பாஜகவின் சப்பை கட்டும் இதன் மூலம் தகர்த்தெறியப் பட்டுள்ளது.
சீசர் சந்தேகத்திற்கு அப்பார்ப் பட்டவராக இருக்க வேண்டும் என்பது பாஜகவை தவிர்த்த பிறருக்கு மட்டும் தானா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக