2014-ம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷியாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது.
இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 8 முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் ஒவ்வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா இரு முறை மோத வேண்டும். 14–வது சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்.
இந்த நிலையில் நேற்று 10–வது சுற்று ஆட்டம் நடந்தது. இதில் 5 முறை சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், அஜர்பைஜான் நாட்டை சேர்ந்த ஷக்ரியர் நேம்ட்யாரோவுடன் மோதினார்.
வெள்ளை நிற காயுடன் ஆடிய ஆனந்த் 30–வது நகர்த்தலில் டிரா செய்தார். ஆனந்துக்கு இது 7–வது டிராவாகும். லெவோன் ஆரோனியன் (அர்மேனியா)– வெஸ்லின் தபலோவ் (பல்கேரியா), செர்ஜி கர்ஜகின் (ரஷியா)– டிமிட்ரி ஆன்ட்ரீகின் (ரஷியா) ஆகியோர் இடையிலான ஆட்டங்களும் ‘டிரா’ ஆனது.
இன்னொரு ஆட்டத்தில் ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லர், சக நாட்டவர் விளாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தினார். 10 சுற்று முடிவில் இந்திய வீரர் ஆனந்த் 6.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ஆரோனியன் 5.5 புள்ளியுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக