நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலை கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் கொளத்தூர் மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க. பெரும் தொழில் நிறுவனங்களின் பின்புலத்தோடு மக்களவைத் தேர்தலில் களமிறங்கியுள்ளன. வளர்ச்சி என்ற பொய் பிரச்சாரத்தோடு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை திராவிடர் விடுதலைக்கழகம் முறியடிக்கும்.
இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி,(எஸ்.டி.பி.ஐ) இந்திய சமூக ஜனநாயக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளுக்கு மக்களவை தேர்தலில் ஆதரவு தெரிவித்து களப்பணியாற்ற உள்ளோம்.
தர்மபுரி தொகுதியில் போட்டியிடும், அன்புமணி ராமதாசுக்கு தர்மபுரி மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டவேண்டும். நரேந்திரமோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவும், துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
1989–-ல் நிறைவேற்றப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் விடுபட்டிருந்த, சில கூறுகளை உள்ளடக்கிய ஒருபுதிய சட்டத்தை அவசர பிரகடனத்தின் வழியாக அமுலாக்கம் செய்துள்ள மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், பொருளாளர் ரெத்தினசாமி, நாகை மாவட்டச் செயலாளர் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் அனைத்து மாவட்டச்செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்வது என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக