செவ்வாய், மார்ச் 25, 2014

வாக்குச்சாவடிகளில் யானைகள் தாக்குதலை தடுக்க மின்வேலி

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள் அதிகளவில் உள்ளன. இவை அடிக்கடி ஊருக்குள் புகுந்து உயிர்ச்சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகள் அமைத்து வருகின்றன.

இவற்றில் சில வாக்குச்சாவடிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் வனப்பகுதி அருகே உள்ளன. இந்த பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள யானைகள் கோடைகாலம் நெருங்கிவிட்டதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரலாம்.அவ்வாறு வரும் யானைகள் வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்துவிடலாம் என தேர்தல் அதிகாரிகள் கருதுகிறார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தேர்தல் ஆணையம் வருவாய் துறை அதிகாரிகளை யானைகள் நடமாட்டம் உள்ள வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வு நடத்தும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி வருவாய்த் துறையும் யானை தாக்குதல் அபாயம் உள்ள வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வு நடத்தின.
அதன்படி பெரியநாயக்கன் பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, வால்பாறை மற்றும் போளுவாம்பட்டி ஆகிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ளது கண்டறியப்பட்டது.இந்த பகுதிகளில் அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளுக்குள் யானைகள் புகுந்துவிடாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

ஆய்வின் முடிவில் யானைகள் நடமாட்டம் மற்றும் வனவிலங்குகளின் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்கம்பி வேலி அமைப்பது என்றும், அவ்வாறு மின்வேலி அமைத்தால் பொதுமக்கள் பயமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பார்கள், தேர்தல் பணியும் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் சுமூகமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–
வனத்துறையானது வாக்குச்சாவடிகளில் வனவிலங்குகளின் தாக்குதல் குறித்த தகவல்களை அடையாளம் கண்டு தெரிவித்து உள்ளோம். சில பகுதிகளில் மின்வேலி அமைக்க தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக