ஞாயிறு, மார்ச் 30, 2014

அசாமில் தேர்தல் பிரசாரம் சமூகத்தை பிளவுபடுத்துவதாக பா.ஜனதா மீது பிரதமர் குற்றச்சாட்டு

அசாமில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜனதா கட்சி சமூகத்தை பிளவுபடுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.
10 ஆண்டுகளில் வளர்ச்சி
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அசாம் மாநிலம் திப்ருகர் மற்றும் ஜோர்காட் தொகுதிகளின் எல்லைப்பகுதியான கும்தாய் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:-
நாட்டின் சுகாதாரம், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளில் கடந்த 10 ஆண்டுகளில் அபரிவிதமான வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் வறுமையில் வாடுகிற மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டதுடன், நலிவுற்ற மக்களின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் எந்த 10 ஆண்டுகளிலும் இல்லாத வளர்ச்சியை, கடந்த 10 ஆண்டுகளில் நாடு எட்டியுள்ளது.
ஊழல் ஒழிப்பு
ஊழலை ஒழிப்பதற்கு நாங்கள் எடுத்த நடவடிக்கைகளைப்போல வேறு யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவர் என நாங்கள் உறுதியளித்துள்ளோம். மேலும் ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டோம். ஆனால் பா.ஜனதா எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை.
அவர்களுக்கு (பா.ஜனதா) எந்தவித கொள்கையோ, நோக்கமோ இல்லை. ஒரே ஒரு நபரை மட்டுமே மையமாகக்கொண்டு அவர்களின் மொத்த கவனமும் உள்ளது. சமூகத்தை பிளவுபடுத்தும் அந்த கட்சியால் எப்படி சிறப்பான அரசை அமைக்க முடியும்? எனவே காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக