புதன், மார்ச் 26, 2014

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி .

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை எளிதில் தோற்கடித்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் வெற்றியை பெற்றது.

5-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் தற்போது நடந்து வரும் சூப்பர்-10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1-ல் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குரூப் 2-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் மிர்புரில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசும், போட்டியை நடத்தும் வங்காளதேசமும் (குரூப்2) சந்தித்தன. டாஸ் ஜெயித்த வங்காளதேச கேப்டன் முஷ்பிகுர் ரம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

கெய்ல் ஆமை வேகத்தில் ஆடினாலும், வெய்ன் சுமித் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். சுழற்பந்து வீச்சாளர் சோஹக் காஜியின் ஒரே ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகளை ஓடவிட்டு அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் (11.5 ஓவர்) சேர்த்த போது இந்த ஜோடி பிரிந்தது. சுமித் 72 ரன்களில் (10 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த சிமோன்ஸ் டக்-அவுட் ஆனார்.

நீண்ட நேரம் களத்தில் நின்றும் வாணவேடிக்கை காட்ட முடியாமல் தவித்த கெய்ல் அதன் பிறகு ஒரு சில ஷாட்டுகளை அடித்தார். என்றாலும், கெய்லால் ரன் வேகம் தளர்ந்தது என்று சொல்லும் அளவுக்கே அவரது ஆட்டம் அமைந்தது. 48 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 48 ரன்கள் எடுத்த அவர் 19-வது ஓவரில் கேட்ச் ஆனார்.

அதே சமயம் கெய்லை கட்டுப்படுத்திய வங்காளதேச அணி, பீல்டிங்கில் கோட்டைவிட்டது. அற்புதமான சில கேட்ச்சுகளை பிடித்த தமிம் இக்பாலை தவிர்த்து, மற்ற வகையில் பீல்டிங் சொதப்பலாகவே இருந்தது. ஓட்டை பீல்டிங்கால் மட்டும் குறைந்தது 15 ரன்களை வங்காளதேசம் கூடுதலாக விட்டுக்கொடுத்தது. அது மட்டுமின்றி அனாவசியமாக சென்ற எக்ஸ்டிராக்களும் (19) வெஸ்ட் இண்டீஸ் சவாலான ஸ்கோரை நோக்கி பயணிக்க உதவியது. இதற்கு மத்தியில் 20-வது ஓவர் மட்டும் வங்காளதேசத்திற்கு ஆறுதல் அளித்தது.

கடைசி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் அல்-அமின் ஹூசைன், அந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் ஒரு ரன்-அவுட்டும் நிகழ்ந்தது.

20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்ததது. சாமுவேல்ஸ் (18 ரன், 22 பந்து), கேப்டன் டேரன் சேமி (14 ரன், 5 பந்து, 3 பவுண்டரி) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய வங்காளதேச பேட்ஸ்மேன்களால், சுழற்பந்து வீச்சாளர் பத்ரீ, வேகப்பந்து வீச்சாளர் கிரிஷ்மர் சான்டோகியை சமாளிக்க முடியவில்லை. அந்த அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் தமிம் இக்பால் (5 ரன்), ஷகிப் அல்-ஹசன் (0), கேப்டன் முஷ்பிகுர் ரம் (22 ரன்) சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், வங்காளதேசத்தால் எந்த ஒரு தருணத்திலும் நிமிர முடியவில்லை.

அந்த அணி 19.1 ஓவர்களில் 98 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. பத்ரீ 4 விக்கெட்டுகளும், சான்டோகி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக