புதன், மார்ச் 26, 2014

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி: மக்கள் போராட்டத்தால்முறியடிப்பு..

பீகாரைச் சார்ந்தவரும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் க்ளோபல் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் படிப்பு பயிலும் மாணவருமான அப்துல் வாஜித்(வயது 21), யாஸர் ஹம்மார்(வயது 21), முஹம்மது மிஹராஜ்(வயது 25) ஆகியோரை பாகிஸ்தானைச் சார்ந்த இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர் என்று கூறப்படும் வகாஸின் கூட்டாளிகள் என்று கூறி ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினரும், டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவும் கடந்த சனிக்கிழமை கைதுச் செய்திருந்தது.இச்செய்தியை தலைப்புச் செய்தியாக போட்டு இந்தியாவின் ஊடகங்களில் கொண்டாடின.மத்திய உள்துறை அமைச்சரும் இந்நடவடிக்கைக்கு குறித்து பெருமிதம் கொண்டார்.ஆனால், இவர்களுடைய உண்மையான பெயர் மற்றும் விபரங்களை போலீஸ் வெளியிடவில்லை.
தனது நண்பரை சந்திக்கவும், டெல்லியை சுற்றிப்பார்க்கவும் 3 பேரும் ஜாமிஆ நகரில் அபுல்ஃபஸல் என்க்ளேவில் நண்பருடைய வீட்டில் தங்கியிருந்தனர். காலை ஏழு மணி அளவில் டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு விசாரணை என்ற பெயரில் 3 பேரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.இதனை வீட்டின் உரிமையாளரான ரிஹான் பஹ்மி தெரிவித்தார்.

இவர்கள் 3 பேரையும் ராஜஸ்தானில் வைத்து கைதுச் செய்ததாக போலீஸ் கூறியிருந்தது.கைதை பதிவுச் செய்யவோ, எத்தனைபேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தவோ செய்யவில்லை.இச்சூழலில் சட்டவிரோதமாக கைதுச் செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி ஜாமிஆ நகர் போலீஸ் நிலையம் மற்றும் நோய்டா சாலையை மக்கள் முற்றுகையிட்டனர்.பிரபலமான டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவை தவிர வேறு யாரும் இவர்களிடம் விசாரணை நடத்தலாம் என்றும், மக்களின் முன்னிலையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உயர் கல்வி பயின்ற முஸ்லிம் இளைஞர்களை கடத்திச் சென்று தீவிரவாத தடுப்புச் சட்டங்களான யு..பி. மற்றும் மோக்கா கறுப்புச் சட்டங்களை பிரயோகித்து சிறையில் அடைப்பதும், ஊடகங்களின் உதவியுடன் பொய்க்கதைகளை ஜோடித்து தீவிரவாத தொடர்பை உறுதிச் செய்யும் டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவின் மீது நம்பிக்கையில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.போலீஸ் அளித்த வாக்குறுதிகளை நம்பாமல் அரசியல் வாதிகளை தவிர்த்து போராட்டத்தில் மக்கள் உறுதியாக இருந்தனர்.12 மணிநேரம் போராட்டம் நீடித்தது.இதனைத்தொடர்ந்து நள்ளிரவில் இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் ஒப்படைத்துவிட்டு போலீஸ் நழுவியது.இதனைத்தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

நேற்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டு குதூகலித்த ஊடகங்கள் இன்று இதுக்குறித்து வாய் திறக்கவில்லை.முன்பு பெரியப்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சுய முன்னேற்ற முகாமில் பங்கேற்றவர்களை தீவிரவாதிகள் என்று கைதுச் செய்து பரபரப்பை ஏற்படுத்த முயன்ற போலீஸ் மற்றும் உளவுத்துறையினரின் முயற்சியை அவ்வூர் மக்களின் போராட்டம் முறியடித்தது.தற்போது டெல்லி மக்களின் போராட்டம் வெற்றியடைந்துள்ளது.போராடாமல் எதனையும் சாதிக்க முடியாது என்பதை இவ்விரு சம்பவங்களும் நினைவூட்டுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக