வியாழன், மார்ச் 27, 2014

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து:ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இன்று ஓட்டெடுப்பு

இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, உலகில் இதுவரை வேறெங்கும் நடைபெறாத வகையில் சிங்கள ராணுவம் போர்க்குற்றங்களை அரங்கேற்றியது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. போர் இல்லாத அமைதி பிரதேசங்களிலும் அப்பாவி தமிழ் மக்கள் கூட்டம், கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
உள்நாட்டுப்போர் முடிந்து 5 ஆண்டுகளாகியும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இன்னும் பெரும்பாலானோர் முள்வேலிகளுக்கு மத்தியில் வாழும் நிலைதான் உள்ளது. நல்லிணக்க நடவடிக்கையும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு எடுக்கப்படவில்லை. சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் சம மதிப்பு, சம நீதியுடன் வாழும் நிலை வரவில்லை.
ஐ.நா.வில் தீர்மானம்
இந்த நிலையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஜெனீவாவில் கூடியுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தை இலங்கை அதிபர் ராஜபக்சே ஏற்கனவே நிராகரித்து விட்டார்.
நவிபிள்ளை வலியுறுத்தல்
இலங்கை பிரச்சினையில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில், ஐ.நா. தூதர் நவி பிள்ளை நேற்று அறிக்கை அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களின் தீவிரத்தை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். நடந்த வன்முறைகள் குறித்து அரசு பல்வேறு வழிவகைகள் மூலம் விசாரணை நடத்தினாலும், பாதிக்கப்பட்ட மக்களிடமும், சாட்சிகளிடமும் நம்பிக்கை ஏற்படுத்துகிற அளவுக்கு அவை சுதந்திரமானவையாக இல்லை’’ என குற்றம் சாட்டினார்.
நம்பத்தகுந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இன்று ஓட்டு?
அமெரிக்க தீர்மானம் இன்று 47 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் பரிசீலனைக்கு வருகிறது. விவாதத்துக்கு பின்னர் இன்று ஓட்டெடுப்புக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இலங்கை நிராகரிப்பு
இதற்கிடையே ஐ.நா.வுக்கான இலங்கை தூதர் ரவிநாத ஆர்யசிங்கா, இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற நவிபிள்ளையின் வேண்டுகோளை நிராகரித்தார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘‘இது முன்கூட்டியே சிந்தித்து உருவாக்கப்பட்டது. அரசியல் நோக்கம் கொண்டது. தவறான அபிப்பிராயம் கொண்டது. ஒரு தலைப்பட்சமானது’’ என கூறினார்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் சம்பந்தன், இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வரவேற்றுள்ளார். தீர்மானத்தின்மீது திருப்தியும் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக