ஞாயிறு, மார்ச் 23, 2014

கைது செய்தால் சந்திக்க தயார் - உதயகுமார்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த உதயகுமார், மை.பா.ஜேசுராஜ், புஷ்பராயன் ஆகிய 3 பேரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர்.

உதயகுமார் கன்னியாகுமரி தொகுதியிலும், ஜேசுராஜ் நெல்லை தொகுதியிலும், புஷ்பராயன் தூத்துக்குடி தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் மீதும் போராட்டத்தை காரணமாக கூறி நெல்லை மாவட்ட காவல்துறையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இடிந்தகரையை விட்டு அவர்கள் வெளியே வந்தால் அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 3 பேரும் அவரவர் தொகுதிகளுக்கு செல்லாமல் உள்ளனர். இணைய தளம் மூலமே பிரசாரத்தையும், தகவல் தொடர்புகளையும் வலுப்படுத்தி வருகின்றனர்.300-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் இவற்றை சட்ட ரீதியாக சந்திக்கவும், உதயகுமார் குழுவினர் ஆயத்தமாகி உள்ளனர். இவர்களுக்கு வக்கீலும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவராகவும் உள்ள பிரசாந்த் பூசன் சட்டப்பூர்வமான உதவிகளை செய்து வருகிறார்.

ஆம் ஆத்மியின் நட்சத்திர வேட்பாளராக கருதப்படும் உதயகுமார் வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும்போது கெஜ்ரிவால் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வாரணாசியில் ஒருமாதம் பிரசாரம் செய்ய உள்ளதால் அவரது வருகை உறுதிபடுத்தப்படாமல் உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு ஏப்ரல் 5-ந்தேதி வரை அவகாசம் இருந்தாலும் இந்த மாதம் இறுதியிலோ ஏப்ரல் மாதம் தொடக்கத்திலோ உதயகுமார், ஜேசுராஜ், புஷ்பராயன் ஆகிய 3 பேரும் ஒரே நாளில் மனுதாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

'வேட்புமனு தாக்கலுக்கு கெஜ்ரிவால் வருகை தர வேண்டும் என்பதே பெரும்பா லானோரது கோரிக்கையாக உள்ளது. நானும் நேரடியாக தலைமையிடம் பேசி வருகிறேன். கெஜ்ரிவால் வருகையை தெரிந்து கொண்டு வருகிற 29-ந்தேதியோ ஏப்ரல் 1-ந்தேதியோ 3 பேரும் மனுதாக்கல் செய்ய உள்ளோம்.

வேட்புமனு தாக்கலுக்கு வரும்போது கைது செய்தால் சந்திக்க தயாராக உள்ளோம். அதற்கு முன்பாகவே சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக