ஜெனிவாவில் நேற்று இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது நடந்த வாக்குப் பதிவை இந்தியா உட்பட 12 நாடுகள் தவிர்த்தது. ஆனாலும் 23 நாடுகளின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேறியது.
இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக 12 நாடுகள் வாக்களித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.முதல் முறை இத்தகைய தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா தவிர்த்துள்ளது. 2009, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில், இலங்கை போர் குற்றங்கள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூன்றுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தது.
இந்த முறை தீர்மானத்தை தவிர்த்ததைக் குறித்து, ஐ.நாவுக்கான இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா கூறியதாவது:
"இந்தத் தீர்மானம் ஒழுங்கற்று, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருப்பதால் இந்தியா இதை தவிர்க்கிறது. ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் உயர் ஆணையர் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து தலையிட்டு, விசாரணை நடத்தி, கண்காணிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த தீர்மானங்களைப் போல் இல்லாமல், இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் உள்ளது.
இறையாண்மையில் தலையிடும் விதமாக இருக்கும் அணுகுமுறை எதிர்வினையை அளிக்கும் என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது. சர்வதேச நாடுகள் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்று ஒத்துழைப்பு என்கிற அடிப்படை கொள்கையிலிருந்து விலகுவது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதித்து, பாதுகாக்க மனித உரிமைக் கவுன்சில் எடுத்து வரும் முயற்சிகளை குறைந்த்து மதிப்பிடுவதாகவே இருக்கும்" என்று அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக