சனி, மார்ச் 22, 2014

அரசியல் லாபத்திற்காக என்னை பகடை காயாக பயன்படுத்த நினைக்கிறார்கள்:சரிதா நாயர் கொந்தளிப்பு

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் சரிதா நாயர். சமீபத்தில் ஜாமீனில் விடுதலையான இவர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் தன்னை காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி லாட்ஜூக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். 
இந்த தகவல் வெளியானதும் கேரள கம்யூனிஸ்டு கட்சியினர் அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் பதவி விலக வேண்டும் எனவும் வற்புறுத்தினர்.
இதற்கிடையே இந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி சரிதாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அந்த சம்மனை அவர் பெற்றுக்கொள்ளவில்லை. போலீசிலும் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் கம்யூனிஸ்டு கட்சியினர் சோலார் பேனல் மோசடி விவகாரத்தை காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பிரசாரமாக்கினர். மேலும் இந்த வழக்கில் பல முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் பேசினர்.
ஆலப்புழா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய மந்திரியுமான கே.சி. வேணுகோபாலும், சரிதா நாயரும் இணைந்திருப்பது போன்ற போஸ்டர்கள் ஆலப்புழா பகுதியில் ஒட்டப்பட்டன.
இது ஆலப்புழா தொகுதி வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சரிதா நாயர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆலப்புழா தொகுதியில் என்னையும், காங்கிரஸ் வேட்பாளர் வேணு கோபாலையும் இணைத்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பற்றி எனக்கு தெரிய வந்தது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியல் லாபத்திற்காக என்னை பகடை காயாக பயன்படுத்த நினைக்கிறார்கள்.
தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க உதவுமாறு கம்யூனிஸ்டுகள் என்னை அணுகினர். அவர்கள் யார் என்பதை இப்போது கூற மாட்டேன். நேரம் வரும் போது தெரிவிப்பேன்.
என்னை மோசமான பெண் என்றும், மோசமானவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர் என்றும் மூத்த தலைவர் அச்சுதானந்தன் கூறி உள்ளார். அவர், எதையும் அவசரப்பட்டு தெரிவித்து வருபவர். அவரை பற்றி அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.
அவர் என்னை விமர்சனம் செய்வதற்கு பதில் அவரது மகனை முதலில் திருத்த முயற்சிக்கட்டும். என்னை பற்றி அவதூறு பரப்பியவர்கள் பற்றியும் போஸ்டர் ஒட்டியவர்கள் மீதும் போலீசில் புகார் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக