வியாழன், ஜனவரி 03, 2013

வெளி மாநிலங்களிலி்ருந்து 1000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குகிறது தமிழகம் !

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின் பற்றாக்குறையை நீக்கும் வகையில் வெளி மாநிலங்களிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குமாறு மின்வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. தற்போது 4000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக சென்னையில் 2 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. சென்னையை தவிர இதர மாவட்டங்களில் குறைந்தது 12 மணி நேரம் மற்றும் அதற்கு மேல் மின்வெட்டு நிலவுகிறது. புதிய மின் திட்டங்களால் இன்னும் கைக்கு மின்சாரம் வராத நிலையே காணப்படுகிறது. எனவே பற்றாக்குறை குறைந்தபாடில்லை. எனவே நிலைமையை சமாளிக்கும் வகையில் வெளிமாநிலங்களிலிருந்தும், தனியார்களிடமிருந்தும் மின்சாரம் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் மனு கொடுத்திருந்தது. அதில், தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தியாளர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகிற ஜூன் மாதம் முதல் 2014 மே மாதம் வரையிலான கால கட்டத்தில் 1000 மெகா வாட் மின்சாரம் வாங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளி மாநிலத்தில் இருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.5 என்ற வீதத்தில் மின்சாரம் வாங்கிக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும் எவ்வளவு மெகாவாட் மின்சாரம் வாங்குவது என்பது மத்திய மின் பாதையில் உள்ள இடத்தை பொறுத்து ஒழுங்கு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக