சனி, ஜனவரி 26, 2013

பத்மா விருதுகள் அறிவிப்பு! ஹைதர் ராஸாவுக்கு பத்ம விபூஷண், அப்துல் ரஷீத் கானுக்கு பத்மபூஷண் !

புதுடெல்லி:பல்வேறு துறையைச் சேர்ந்த 108 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு நாளில் குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கப்படும். நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல், தொழில்நுட்பத் துறை,வர்த்தகம், தொழில் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, இந்திய அரசுப் பணி உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை
, இலக்கியப் பிரிவில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரகுநாத் மொஹாபத்ரா, டெல்லியைச் சேர்ந்த எஸ். ஹைதர் ராஸா ஆகியோர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அறிவியல்,தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் யஷ்பால் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆர். நரசிம்மா ஆகியோருக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட உள்ளது.
பத்மபூஷண் விருது : டி.ராமா நாயுடு (கலை-ஆந்திரம்), எஸ். ஜானகி (கலை-தமிழ்நாடு), ஷர்மிளா தாகூர்(கலை – தில்லி), சரோஜா வைத்யநாதன் (கலை-தில்லி), அப்துல் ரஷீத் கான் (கலை – மேற்கு வங்கம்), ராஜேஷ் கன்னா (கலை – மகாராஷ்டிரம்), ஜஸ்பால் சிங் பட்டி (கலை -பஞ்சாப்), சிவாஜி ராவ் கிரிதர் பாடீல் (பொது விவகாரம் – மகாராஷ்டிரம்), டாக்டர் ஏ. சிவதாணுப் பிள்ளை(அறிவியல் தொழில்நுட்பம் – டெல்லி), வி.கே. சாரஸ்வத் (அறிவியல் தொழில்நுட்பம் – டெல்லி),டாக்டர் அசோக் சென் (அறிவியல் தொழில்நுட்பம் – உத்தரப் பிரதேசம்), பி.என். சுரேஷ்(அறிவியல் தொழில்நுட்பம் – கர்நாடகம்), பேராசிரியர் சத்யா என் அட்லூரி (அறிவியல் தொழில்நுட்பம்- அமெரிக்கா), பேராசிரியர் ஜோசப் சந்திர பட்டி (அறிவியல் தொழில்நுட்பம் – அமெரிக்கா),ஸ்ரீராம் குழுமம் தலைவர் ஆர்.தியாகராஜன் (தொழில் வர்த்தகம் – தமிழ்நாடு), கோத்ரெஜ் குழுமம் தலைவர் ஆதி கோத்ரெஜ் (தொழில் வர்த்தகம் – மகாராஷ்டிரம்), மங்கேஷ் பட்கோங்கர் (இலக்கியம் & கல்வி – மகாராஷ்டிரம்), பேராசிரியர் காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக்(கலை இலக்கியம் – அமெரிக்கா), டாக்டர் மகாராஜ் கிஷண் பன் (பொது நிர்வாகம் – தில்லி), ராகுல் திராவிட் (விளையாட்டு – கர்நாடகம்) உள்ளிட்டோர்.
பத்மஸ்ரீ விருது:தெலுங்கு இயக்குநர் பாபு என்கிற லட்சுமி நாராயண சத்திராஜு (கலை), ஈரோடு தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தன் (சமூக சேவை), பி.எஸ்.ஜி. குடும்பத்தை சேர்ந்த ராஜ்ஸ்ரீ பதி(தொழில்துறை), டி.வி. தேவராஜன் (மருத்துவம்), மலையாள நடிகர் மது உள்ளிட்ட 80 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பத்மா விருதுகளை பெற்ற முஸ்லிம்களின் விபரம்:
கலை, இலக்கிய பிரிவில் டெல்லியைச் சார்ந்த எஸ்.ஹைதர் ராஸா உயரிய விருதான பத்மவிபூஷணை பெற்றுள்ளார். மேற்குவங்காளத்தைச் சார்ந்த பாடகர் அப்துல் ரஷீத் கான் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.
பத்மஸ்ரீ விருதினை பாட்னா மவ்லானா மஷாருல் ஹக் அரபி மற்றும் பாரசீக பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கேப்டன் பேராசிரியர் டாக்டர்.முஹம்மது ஷரஃப்-இ-ஆலம், பிரபல உருது கவிஞர் நிதா ஃபாசில், கல்வியாளர் பேராசிரியர் அக்தாருல் வாஸ்லி, சூஃபி பாடகர் ஜம்மு கஷ்மீரைச் சார்ந்த குலாம் முஹம்மது ஷஸ்னவாஸ், ராஜஸ்தானைச் சார்ந்த எஸ்.ஷாக்கிர் அலி ஆகியோர் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வாண்டு ஜனவரி4-ஆம் தேதி தனது 100-வது வயதில் இறந்த சுதந்திர போராட்ட வீரரும், உருது கவிஞருமான ஷவ்கத் ரியாஸ் கபூர் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு மரியாதைச் செய்யப்பட்டுள்ளார்.
2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக