புதன், ஜனவரி 16, 2013

மாலியில் போராளிகளுக்கு முன்னேற்றம் !

பமாகோ: பிரான்சு ராணுவத்தின் தரை வழி, வான் வழி தாக்குதல்களுக்கு பலத்த பதிலடிகளை கொடுத்து மாலியில் போராளிகள் முன்னேறி வருகிறார்கள். நேற்று மேலும் பல பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போராளிகள் தலைநகரமான பமாகோவை நோக்கி முன்னேறுவதாக இறுதியாக கிடைத்த செய்திகள் கூறுகின்றன. மாலியின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்ட பிரான்சு நரகத்தின் வாசல்களை திறந்துவிட்டுள்ளதாக போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈராக்,
ஆப்கான், சோமாலியாவில் சந்தித்தவை விட மிகப்பெரிய வீழ்ச்சி மாலியில் பிரான்சுக்காக காத்திருக்கிறது என்று வடக்கு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பழங்குடியின தலைவர் உமர் அவ்த் ஹமாஹா பிரான்சு ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மாலியில் போராளிகள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பிரான்சு ராணுவம் கடுமையான தாக்குதல்களை கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடத்தி வருகிறது. ஆனால், துவக்கத்தில் பின்வாங்கிய போராளிகள் கடந்த 2 தினங்களாக வலுவான பதிலடிகளை கொடுத்த வருகின்றனர். அதே வேளையில், கூடுதல் ராணுவ வீரர்களை மாலிக்கு அனுப்ப போவதாக பிரான்சு அதிபர் பிரான்சுவா ஓலண்ட் அறிவித்துள்ளார்.
தற்பொழுது 750 பிரான்சு ராணுவ வீரர்கள் மாலியில் உள்ளனர். போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பிரான்சு ராணுவம் தாக்குதலை பலப்படுத்தும் என்று அவர் கூறினார்.
மாலியில் பிரான்சு தலையிட கடந்த வாரம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் திங்கள் கிழமை அனுமதி அளித்தது. 900 ராணுவ வீரர்களை அனுப்பப்போவதாக நைஜீரியா  அறிவித்துள்ளது. முன்னர் 300 ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று நைஜீரியா அறிவித்திருந்தது. 2500 பிரான்சு ராணுவ வீரர்கள் உடனடியாக மாலிக்கு செல்வார்கள் என்று கருதப்படுகிறது. ஐவரிகோஸ்டில் இருந்து 30 பிரான்சு நாட்டு ராணுவ டாங்குகள் நேற்று மாலிக்கு சென்றது. தாக்குதல் தீவிரமடைந்துள்ள பகுதிகளில் இருந்து 3 ஆயிரம் பேர் வெளியேறியதாக ஐ.நா கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக