வியாழன், ஜனவரி 31, 2013

விஸ்வரூபம் தொடர்பான முதல்வர் அறிவிப்புக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு !

சென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட விளக்கம் மற்றும் அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைப்பின் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லிம் தலைவர்களுடன் கமலஹாசன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டு சமரசம் கண்டால் அரசு அதற்கு ஒத்துழைக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது

முதல்வரின் அறிவுரையை ஏற்று முஸ்லிம் தலைவர்களுடன் கமலஹாசன் பேச்சு வார்த்தை நடத்தி இஸ்லாத்திற்கு எதிரான காட்சிகளை நீக்கினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது எதிர்ப்பை கைவிடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். சட்டம் ஒழுங்கை காப்பதில் முதல்வருக்கு இருந்த அக்கறையை அனைவரும புரிந்து கொண்டு இது குறித்த விமர்சனங்களை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்று ரஹ்மத்துல்லாஹ் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் வெளியிட்டிருந்த அறிக்கையில், விஸ்வரூபம் தொடர்பான எந்த முடிவாக இருந்தாலும் 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும். 

பிரச்சினையை வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது. 23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் செய்யக் கூடாது. 23 அமைப்புகள் இந்த விஷயத்தில் ஏற்றுக்கொள்ளும் காட்சி நீக்கங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளும். இந்த விஷயத்தில் பெயர் முக்கியமல்ல, இந்து முஸ்லிம் நல்லிணக்க குலைவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதே நமது நோக்கம் என்று கூறியிருந்தார்.
2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக