இஸ்லாமாபாத்: மின்சார திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதில் லஞ்சம் வாங்கினார் என்ற வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃபை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் யூசுஃப் ரஸா கிலானி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பர்வேஸ் அஷ்ரஃப் பிரதமர் பதவியை ஏற்றார். பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முறையாக உச்சநீதிமன்றம் ஒரு
பிரதமரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மின்சார திட்டங்கள் தொடர்பாக அரசு அனுமதித்த ஒப்பந்தங்கள் சட்ட விரோதமானது என்று கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதன் பின்னணியில் செயல்பட்ட ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் உள்ளிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், பாகிஸ்தானில் முக்கிய ஊழல் தடுப்பு ஏஜன்சியான (என்.ஏ.பி) நேசனல் அக்கவுண்டபிலிட்டி பீரோ நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்துவிட்டது.
பாகிஸ்தான் சந்தித்துவரும் கடுமையான மின் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணவே பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசு கொண்டு வந்த திட்டங்களின் அடிப்படையில் தனியார் ஒப்பந்தங்கள் அனுமதிக்கப்பட்டன. அப்பொழுது பர்வேஸ் அஷ்ரஃப் மின்சார துறை அமைச்சராக பதவி வகித்தார்.
2011-ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவை மறு சீரமைப்பில் அமைச்சர் பதவியை இழந்த போதும் பர்வேஸ் அஷ்ரஃப், அதிபர் சர்தாரியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக தொடர்ந்தார். 2009-ஆம் ஆண்டு பி.எம்.எல்.க்யூ கட்சியின் உறுப்பினர் ஃபைஸல் ஸாலிஹ் ஹயாத் அளித்த புகாரைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் மின்சார ஒப்பந்தங்கள் தொடர்பாக விசாரணையை துவக்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக