வெள்ளி, ஜனவரி 18, 2013

தானமாக கிடைத்த இதயங்கள் மருத்துவக் கழிவாகிறது ! – சென்னையில் அவலம்!!

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நோயாளிகளால் மொத்தம் 250 இதயங்கள் வரை பெறப்பட்டபோதும், உடனடி மருத்துவ வசதியின்மை, தொலைவு, நோயாளிகளின் ஒத்துழைப்பு இன்மை, தானம் தருபவர் சம்மதித்தும் உறவினர்களின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களால் தானம் பெறப்பட்ட உடல் உறுப்புகள் பெரும்பாலும் குப்பைக்கு செல்லும் அவல நிலை தொடர்கிறது. மனிதனுக்கு ஏற்படும் நோய்களில் இதய நோயே அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதய பாதிப்பால் ‘கோமா நிலை’யில் உள்ள நோயாளியையும் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றலாம் என்ற அளவுக்கு மருத்துவம் வளர்ந்துள்ளது.இதனால் விபத்துகள், நோய்களால் பாதிக்கப்படும் பலர், மற்றவர்கள் நலன்கருதி உடல் உறுப்புகளை தானம் செய்து வருகின்றனர். அவ்வாறு தானம் செய்யப்படும் உறுப்புகளில் பல பயன்படுத்தாமல் குப்பைக்கு செல்கின்றன.

கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி தமிழகத்தில் மொத்தம் 306 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். மொத்தம் 1741 உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. இதில் இதயம்,52, நுரையீரல் ,13, கல்லீரல், 280, சிறுநீரகம், 563, இதய வால்வு, 350, கண்விழி, 482 மற்றும் ஒரு உடல்தானம் என்று தானங்கள் பெறப்பட்டுள்ளன.
தேவையான இந்த உறுப்புகளை குறிப்பிட்ட நேரத்தில் மற்றொரு நோயாளிக்கு பொருத்தினால்தான் அவை பயனளிக்கும். இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இதய மாற்று அறுவை சிகிச்சைதான் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஹைதராபாத், டெல்லி, பெங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதிகள் உள்ளன.
சென்னையை பொறுத்தவரை தானமாக பெறப்படும் இதயங்களில் 17 சதவீதம் மட்டுமே மாற்றப்பட்டு மற்றவர்களுக்கு பொருத்தப்படுகிறது. மற்ற இதயங்கள் மருத்துவ கழிவுகளாக வீசப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நோயாளிகளால் மொத்தம் 250 இதயங்கள் வரை பெறப்பட்டபோதும், உடனடி மருத்துவ வசதியின்மை, தொலைவு, நோயாளிகளின் ஒத்துழைப்பு இன்மை, தானம் தருபவர் சம்மதித்தும் உறவினர்களின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களால் தானம் பெறப்பட்ட உடல் உறுப்புகளும் குப்பைக்கு செல்லும் அவல நிலை தொடர்கிறது.
இத்தகவல்களை மருத்துவத்துறையினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது குறித்து இந்திய மருத்துவர்கள் சங்க முன்னாள் தலைவர் பிரகாசம் கூறுகையில், ‘‘ இதய மாற்று அறுவை சிகிச்சையை பொறுத்தவரை மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையாகும். இது சென்னையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. இதற்கு நிமிடம் கூட முக்கியமானது. பெரும்பாலும் சென்னையில் இதய பைபாஸ் மட்டுமே அதிகளவில் செய்யப்படுகிறது.
நோயாளிகளின் ஒத்துழைப்பு, கட்டணம், போக்குவரத்து, தானம் அளிப்பவரின் உடல் அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறதா, பெறுபவரின் உடல் அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறதா, இரு தரப்பு உறவினர்கள் ஒத்துழைப்பு, மருத்துவ வசதிகள் போன்றவைதான் இதய அறுவை சிகிச்சையை தீர்மானிக்கும். சில உறுப்புகளை போல இதயத்தை வெகு நேரத்துக்கு வைத்திருந்து மாற்ற இயலாது. குறிப்பிட்ட மணித்துளிகளில் செய்ய வேண்டும். இல்லையேல் அது மருத்துவ கழிவுதான்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக