வியாழன், ஜனவரி 31, 2013

கருணாநிதியின் விஸ்வரூபம்! தாங்குமா தமிழகம்!

விஸ்வரூபம் படத்தினை வெளியிட மீண்டும் தடை. உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவு. இதை தொடர்ந்து,  விஸ்வரூபத்தை அரசியல் ஆக்குகிறார் கருணாநிதி. இவரை மாதிரி ஒரு கேவலமான அரசியல் தலைவரை தமிழகம் கண்டிருக்காது என்றே சொல்லாம். விஸ்வரூபம் படத்தை ஜெயலலிதா தடை செய்ததற்கு கமல், சிதபரத்தை பிரதமர் ஆகவேண்டும் என்று சொன்னார், ஜெயா டிவிக்கு விஸ்வரூபத்தை தர மறுத்தார், இப்படி பல காரணங்களை சொல்கிறார் இந்த அரசியல் கோமாளி. பிரச்சனைகள் வந்து விட கூடாது என்று படத்தை  தடை செய்த தமிழக அரசை கேலி செய்யும் இவர், கோயம்புத்தூர் கலவரம் நடக்கும் பொழுது நான் மூன்று நாட்களாக முதல்வர் பதவியிலேயே இல்லை என்று சொன்னவர்தான் அந்த அளவுக்கு திறமையான ஆட்சியாளர்.

கருணாநிதி பண்ணுகிற மட்டமான அரசியலில் நடுத்தெருவுக்கு வரப்போவது என்னவோ கமல்தான். இதை, இவர் புரிந்த கொண்ட மாதிரி தெரியவில்லை. மேலும் ஏழரையை கூட்டுகிறார். தமிழகத்தை விட்டு வெளியேற போகிறேன், மதச்சார்பில்லாத மாநிலத்துக்கு போக போறேன் என்று சொல்வது, ரசிகர்களை வைத்து அனுதாபம் தேடுவது போன்றவற்றை விட்டு விட்டு உருப்படியான தீர்வை காண முன்வரவேண்டும்.

கமலஹாசன் என்கிற தனி நபர் புகழுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு இந்தியாவில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு என்று பல்வேறு வகைகளில் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தை, மேலும் புண்படுத்தும் வகையில் படம் எடுத்து சமூக அமைதியை குலைக்க நினைப்பது சரியா? தான் செய்த தவறை உணர்ந்து அதற்க்கான பரிகாரத்தை செய்ய கமல் முன்வர வேண்டும். இதுவே உண்மையாக பிரச்னையை தீர்க்க உதவும்.

சும்மா கருத்து சுதந்திரம், கத்திரிக்காய் என்று பேசி விட்டு தங்களுக்கு பாதகமான விசயம் வரும் பொழுது அதை காற்றில் பறக்க விடுவதை விட நடு நிலையாக இந்த விஷயத்தை பார்ப்பதே சரியான அணுகுமுறை. கமல் ஹாசன் தனி நபர், அவர் செய்வது வியாபாரம். ஆனால் அவர் தாக்குவதோ ஒரு சமூகத்தை. அந்த சமூகத்திற்கு இது வியாபாரம் இல்லை நம்பிக்கை சார்ந்த விஷயம். நமது கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவர்களின் மூக்கு நுனிவரைதான் என்பதை கமல் புரிந்து கொள்ள வேண்டும்.

தலிபான் தலைவர் உமர், மதுரையிலும், கோவையிலும் தங்கி இருந்தார் என்று சொல்லும் கருத்து விசமத்தனமான, உள்நோக்கம் கொண்டது. இதன் மூலம் மதுரை, கோவை முஸ்லிம்களை தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்துகிறார். மேலும் உமர் பச்சிளம் பாலகனாகிய தன் மகனிடம் பல்வேறு ரக துப்பாக்கிகளின் தோட்டாக்களை ஒரு துணியில் மறைத்து ஒன்றன் பின் ஒன்றாக காட்டுவதும் அதை அந்த பட்சிளம் பாலகன் தடவிபார்த்து, அது எந்த ரகத்தை சேர்ந்த தோட்டா என்று சரியாக சொல்வதும் ஆகிய இந்த கருத்து, சிறுவர்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஊடக பயங்கரவாதம். 

முஸ்லிம்களே சொல்கிறார்கள் தலிபான், லஸ்கர் பற்றி கமல் படம் எடுக்கட்டும் அதை பற்றி கவலை இல்லை. ஆனால் அதில் ஏன் முஸ்லிம்களின் வழிபாடுகளை, நம்பிக்கைகளை அவமதித்து எடுக்க வேண்டும் இதுவே அவர்களது கேள்வி. இதில் சிலர் சென்சார் போர்ட் அனுமதி கொடுத்து விட்டால் படத்தை தடுப்பது முறையில்லை என்கின்றனர். ஏதோ நாமெல்லாம் லஞ்சம் இல்லாத நாட்டில் வாழ்வதாக அவர்களுக்கு நினைப்பு. பிச்சை காசை தூக்கி எறிந்தாலே சென்சார் போர்டு வாலாட்டும், நூறு கோடி செலவில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படத்திற்கு கேட்கவா வேண்டும். 

கருணாநிதி, ராமதாஸ், விஜயகாந்த் என்கிற வெத்துவேட்டுகளை நம்பி ஏமாறாமல் படத்தில் இருக்கும் ஆட்சேபணைக் குரிய கருத்துக்களை நீக்கி வெளியிடுவதே கமலுக்கு நல்லது.

சமூக ஒற்றுமை என்பது கண் போன்றது! கண்ணை விற்று வியாபாரம் செய்யாதீர்கள்! என்பதே நமது அன்பான வேண்டுகோள்!

நன்றி : சிந்திக்கவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக