வெள்ளி, ஜனவரி 18, 2013

மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு !

ஒரு எரிவாயு இணைப்புக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானியத் தொகையில் வழங்கப்படும் என்ற திட்டத்தில் சிறிது தளர்வை ஏற்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று முடிவு செய்தது. அதன்படி, ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை மானிய விலையில் அளிக்க முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரி சபையின் அரசியல் விவகாரங்களுக்கான குழு கூட்டம் இன்று பகல் 11 மணிக்கு நடந்தது. கூட்டத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஜார்க்கண்ட் மாநில விவகாரம், சமையல் கியாஸ் விலை உயர்வு, எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

எண்ணை நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4.50, சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.100 உயர்த்த பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரைத்தது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
நீண்ட விவாதத்துக்கு பிறகு சமையல் கியாஸ், டீசல் விலை உயர்வுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே டீசல், கியாஸ் விலை உயர்வு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் டீசல் விலையை உயர்த்திக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.
ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்கள் எண்ணிக்கையை 6-ல் இருந்து 9 ஆக உயர்த்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் முதல் மானிய விலையில் 9 சிலிண்டர்கள் வழங்குவது அமலுக்கு வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக