சனி, ஜனவரி 26, 2013

எது கலாச்சார தீவிரவாதம்? - கமல் அறியாமையின் வடிவமா? எதேச்சியதிகாரத்தின் தூண்டுகோலா?

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 15 நாள் தற்காலிக தடை விதித்ததை தொடர்ந்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை கமலின் உண்மை முகத்தை (சுயரூபத்தை) வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு ஆதரவான திரைப்படம் என்றும் இத்திரைப்படம் வெளிவந்தால் முஸ்லிம்கள் பிரியாணி கொடுப்பார்கள் என்றும் கூறினார். ஆனால் திரைப்படத்தின் உண்மை நிலையோ வேறு. திரைப்படம் முழுவதுமே முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், உலகப்பொதுமறையாம் திருக்குர்ஆனை தீவிரவாத நூலாகவும், முஸ்லிம்களின் வழிபாட்டை தீவிரவாத வழிப்பாடாகவும் சித்தரித்தே வெளிவந்துள்ளது. முஸ்லிம்களின் உயர்ந்த கலாசாரத்தையே
தீவிரவாத கலாச்சாரமாக சித்தரிக்கும் கமல் அவரின் சுயரூபத்தை எதிர்க்கும் போது அதை கலாச்சார தீவிரவாதம் என்கிறார். இது கமலின் இரட்டை முகத்தையே காட்டுகிறது.


மேலும் விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்கள் தேசபக்தி இல்லாதவர்கள் என்று அறிக்கைவிடுகிறார். கமல் தேசபக்தியின் அளவுகோல் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். தன்னுடைய படத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக மற்றவர்களின் தேசபக்தியை குறை சொல்ல வேண்டும் என்றால் கமல் தன் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும். ஹேராம், உன்னைப்போல் ஒருவன், போன்ற திரைப்படங்களில் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாக கருத்துக்களை பதிவு செய்ததன் தொடர்ச்சியாக விஸ்வரூபத்தை வெளியிட்டுள்ள கமலுக்கு முஸ்லிம்களின் தேசப்பற்றை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

தங்களுடைய பொய் முகத்தை மறைப்பதற்கு சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் பயன்படுத்தும் வார்த்தைதான் தேசப்பற்று. இதையே இன்று கமல் உதிர்த்திருப்பதன் மூலம் கமலின் சுயரூபம் விஸ்வரூபமாக வெளிவந்துள்ளது. இது போன்ற விஷமக்கருத்துக்களை வெளியிடுவதை கமல் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். இது போன்ற விஷமக்கருத்துக்கள் அறியாமையில் வெளியிடும் கருத்துக்களைப் போல் தெரியவில்லை. மாறாக எதேச்சியதிகாரத்தின் தூண்டுகோலாகத்தான் உள்ளது. கமலின் வார்த்தைகளும் முஸ்லிம்களின் போராட்டத்தை தீர்மானிக்கும்.                                                                                                  1


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக