ஊழல் வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா உட்பட 55 பேரை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் சவுதாலா, அவரது மகனும் எம்.எல்.ஏ.வுமான அஜய் சவுதாலா ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தண்டனை விவரம் வரும் 22ம் தேதி அறிவிக்கப்படுகிறது. அரியானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு முன்பு ஓம்பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தள கட்சி
ஆட்சி நடைபெற்றது. 2000ம் ஆண்டில் ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்தார். அவரது ஆட்சி காலத்தில் 3,206 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில் பெருமளவு முறைகேடு நடைபெற்றிருப்பதாக ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உட்பட 62 பேர் மீது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ ஊழல் வழக்கு தொடர்ந்தது. விசாரணையின்போது 6 பேர் இறந்தனர். குற்றச்சாட்டு பதிவு செய்யும்போது போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஒருவர் விடுவிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. கடந்த மாதம் 17ம் தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஓம்பிரகாஷ் சவுதாலா, அஜய் சவுதாலா உட்பட 55 பேரும் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிபதி வினோத் குமார் தீர்ப்பளித்தார். தற்போது, ஜாமீனில் வெளியில் உள்ள அவர்களை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டார்.
வரும் 22ம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி, அனைவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அவர் களை கைது செய்ய நீதிபதி, உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து சவுதாலா உட்பட அனைவரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். முதல்வர் கருத்து: நீதிமன்ற தீர்ப்பு குறித்து அரியானா முதல்வர் புபீந்தர் சிங் ஹுடா கூறுகையில், ‘‘சட்டம் தனது கடமையை செய்துள்ளது. சட்டத்தை மீறி செயல்படும்போது முடிவு இப்படித்தான் இருக்கும்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக