புதன், ஜனவரி 30, 2013

விஸ்வரூபம் தடை நீக்கம் : நீதிமன்றத்தின் தீர்ப்பு மதச்சார்பற்ற தன்மையை விரும்பக்கூடிய தரப்பினருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது ! – எஸ்.டி.பி.ஐ

நடிகர் கமலின் விஸ்வரூபம் திரைப்படம் மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மதச்சார்பற்ற தன்மையை விரும்பக்கூடிய அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ
கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின்  மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் :
“தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் துப்பாக்கி படத்தை தொடர்ந்து கமலஹாசன் நடித்து, இயக்கி தயாரித்துள்ள விஸ்வரூபம் படமானது முஸ்லிம்களை மிகவும் மோசமான முறையில் பயங்கரவாதிகளாக சித்தரித்தும், முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனை தவறாக சித்தரித்தும் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மற்றும் மதச்சார்பற்ற தன்மையில் நம்பிக்கை கொண்ட சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடையே எதிர்ப்பு வலுத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விஸ்வரூபம் படத்திற்கு இரண்டு வார கால தடை விதித்தது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவிற்கு இன்று (29-01-13) சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவானது முஸ்லிம்கள் மத்தியிலும், மதச்சார்பற்ற தன்மையை விரும்பக்கூடிய அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி கேட்டுக்கொள்கிறது. இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் மற்றும் பொதுமக்கள் அமைதி காத்து ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சி இது சம்பந்தமாக அனைத்து தரப்பு மக்களையும் கலந்தாலோசித்து தேவையான மேல் நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.                                                                              1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக