கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்..
நமாஸ் செய்து விட்டு கொலை
விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் நமாஸ் செய்வது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றனர்.
தீவிரவாதிகளின் கையேடா திருக்குரான்..?
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன்.
அதாவது தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் கையில் திருக்குரான் இருப்பது போலவும், அதில் உள்ள வாசகங்களைப் படித்து விட்டு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுவது போலவும் காட்டுகிறார்.
கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காட்டுகிறார்கள்
தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள், மனிதர்களின் கழுத்தை அறுப்பதை தத்ரூபமாக சித்தரித்துள்ளனர்.இது இஸ்லாயமிர்கள் குறித்த பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை பதிய வைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்.
மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடமா?
மசூதிகளையும், பள்ளிவாசல்களையும் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டியுள்ளனர். உலமாக்களை தீவிரவாத தலைவர்கள் போல காட்டியுள்ளனர். அல்லாஹு அக்பர் என்ற புனித வாசகத்தை தீவிரவாதிகளின் சங்கேத பாஷை போல காட்டியுள்ளனர்.
தமிழர்களையும் இழிவுபடுத்தியுள்ளார்
முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அதுகுறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன்.
தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.
மொத்தத்தில் முஸ்லீம்கள் என்றால் தவறானவர்கள், மோசமானவர்கள், முரட்டுத்தனமானவர்கள், எதையும் செய்யத் துணிபவர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்பது போல இப்படத்தில் காட்டியுள்ளார்.
அமைதிப் புறாக்களையும் விடவில்லை கமல்
அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விடவில்லை கமல். அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.
எனவேதான் இந்தப் படத்தை எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளனர் இஸ்லாமிய அமைப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக