தமிழ் மொழியின் முதல் எதிரியாக ஜெயலலிதா உள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். தென்சென்னை மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், மயிலாப்பூர் மாங்கொல்லையில் பொங்கல் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கருணாநிதி, "தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைப்பதற்கு பரிதிமாற்கலைஞர் முதல் போராடி உள்ளனர். திமுக ஆட்சியின்போது தில்லியில் சோனியா காந்தியைச் சந்தித்து, தமிழுக்குச் செம்மொழி தகுதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன் பிறகு செம்மொழி தகுதி கிடைத்தது.
ஆனால் செம்மொழி என்பதையே எதிர்க்கக்கூடிய ஆட்சிதான் இப்போது நடைபெற்று வருகிறது. தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைத்ததற்கு அடையாளமாக செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இப்போது அந்தப் பலகையே அகற்றப்பட்டு, அந்த இடமும் வேறு ஒருவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. தமிழ் மொழியின் முதல் எதிரியாக முதல்வர் ஜெயலலிதா உள்ளார்.
தமிழர்களுடைய அடிப்படைக் கலையான நாட்டுப்புறக் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும்.சங்கமம் நிகழ்ச்சிக்கு சில ஆண்டுகளாக இடையூறு ஏற்பட்டது. ஆனால் இனி ஆண்டுதோறும் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும்
எம்.ஜி.ஆரிடம் கெஞ்சி நான் முதல்வர் ஆனதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.இந்த விவகாரத்துக்குள் நுழைந்து செல்ல விரும்பவில்லை.அதேசமயம் எம்ஜிஆர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது,ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினார். அதில் தன்னை முதல்வராக்கும்படி ஜெயலலிதா கேட்டிருந்தார்.இதற்கான ஆதாரத்தைக் கேட்டால் காட்டத் தயாராக இருக்கிறேன்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் 2 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இப்போது அதிமுக ஆட்சியில் 16 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது.திமுகவைக் குற்றம்சாட்டுவதை விட்டு எரியாத விளக்குகளை எரிய வையுங்கள்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக