அல் ஹலீல்: கடந்த திங்கட்கிழமை (14/01/2013) அல் ஹலீல் பிரதேசத்தின் யத்தா கிராமத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் குவிக்கப்பட்டன.ஆக்கிரமிப்புப் படையினர் யத்தா கிராமத்தில் இருந்த பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான உடைமைகளை நிர்மூலமாக்கும் நாசவேலையில் முழு மூச்சுடன் ஈடுபட்டனர். இதேவேளை, "உம் அல் ஹைர் பிரதேசத்துக்குள் திடீரென நுழைந்த ஆக்கிரமிப்பு இராணுவம், பலஸ்தீனர்களின் விலங்குப் பண்ணைகளையும், தானியக்
களஞ்சியங்களையும் புல்டோஸர்கள் மூலம் அழித்து நாசப்படுத்தியது" என சம்பவத்தை நேரில் கண்ட உள்ளூர்வாசிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.யத்தா கிராமத்துக்குச் சொந்தமான பெரும் நிலப்பரப்பை அபகரித்து அமைக்கப்பட்ட கர்மைல் எனும் சட்டவிரோத யூதக் குடியிருப்பின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்ற எண்ணத்திலேயே அப்பகுதியில் உள்ள பலஸ்தீனர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டு, அவர்களை அவ்விடங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஆக்கிரமிப்புப் படையினர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் இத்தகைய நாசவேலைகளால் அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனால், ஆக்கிரமிப்பு இராணுவம் சுற்று வட்டாரமெங்கும் பெருவாரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக