செவ்வாய், ஜனவரி 22, 2013

ஊழல் வழக்கு: ஹரியானா மாஜி முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா, மகன் அஜய் உட்பட 8 பேருக்கு 10 ஆண்டு சிறை !

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உட்பட 8 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் 2000-ம் ஆண்டு இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரான ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்த போது 3 ஆயிரம் ஆசிரியர்க நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது என்பது புகார். இந்த புகார் மீது சிபிஐ வழக்குப் பதிவு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்ட 55 பேரும் குற்றவாளிகள் என டெல்லி சிபிஐ நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கடந்த 16-ந் தேதி கைது செய்யபப்ட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இன்று முற்பகல் டெல்லி நீதிமன்றம் தண்டனை விவரத்தை அறிவித்தது. சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்ட 8 பேருக்கு 10 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி ரோகினியில் உள்ள நீதிமன்றம் முன்பாக கூடியிருந்த சவுதாலா ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். அவர்கள் சவுதாலாவுக்கு தண்டனை தர எதிர்ப்புத் தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் போலீசாருக்கும் சவுதாலா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. அவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியதுடன் கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாடப் போவதாக செளதாலா அறிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஹரியாணா சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்தக் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்படும் என்று தெரிகிறது. ஊழல் வழக்கில் ஒரு முன்னாள் முதல்வருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்திருப்பது நல்ல விஷயமாகும். இதே போன்ற தீர்ப்புகள் வந்தால் மேலும் சில முன்னாள், இந் நாள் ஊழல் முதல்வர்களுக்கும் பெரும் சிக்கல் ஏற்படப் போவது நிச்சயம்...
2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக