வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் மன்னர் ஷேக் பின் கலிஃபா அல்-தானி (Sheikh Bin Khalifa al-Thani) பதவி விலகியுள்ளார். தலைநகர் தோகாவில் தமது குடும்பத்தினருடன் ஆலோசித்த அவர், ஆட்சிப் பொறுப்பை தமது மகனும் இளவரசருமான ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி (Sheikh Tamim bin Hamad al-Thani)-யிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
கத்தார் அரசுத் தொலைக்காட்சியான அல் ஜசீராவில் தோன்றி உரையாற்றிய மன்னர் ஷேக் பின் கலிஃபா அல்-தானி (Sheikh bin Khalifa al-Thani), நேற்று முதல் நாட்டை இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி (Sheikh Tamim bin Hamad al-Thani) வழிநடத்துவார் என்று அறிவித்தார்.
வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை, மன்னர் உயிருடன் இருக்கும் போதே சுமூகமாக ஆட்சி மாற்றம் நடப்பது இதுவே முதல் முறையாகும். மன்னர் பதவியில் இருந்து விலகினாலும், 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாட்டுக் குழு தலைவராக ஷேக் பின் கலிஃபா அல்-தானி (Sheikh bin Khalifa al-Thani) தொடர்ந்து செயல்படுவார். 2016 -2017ம் ஆண்டு வரையிலான பட்ஜெட் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்ட நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான பணிகளில் கத்தார் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த ஆட்சி மாற்றம், கத்தாரின் வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அரங்கில் கத்தார்:
சுமார் 20 லட்சம் பேர் வாழும் மிகச் சிறிய நாடான கத்தார், உலக அரங்கில் பெற்றுள்ள முக்கியத்துவம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
மிகச் சிறிய நாடாக இருந்தாலும், உலகிலேயே மிக அதிக அளவு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடு கத்தார்தான். ஃபோர்ப்ஸ் பத்திரிகை கணிப்புப் படி, தனிநபர் வருவாய் அடிப்படையில் உலகின் பணக்கார நாடு கத்தார். மத்திய கிழக்கின் அமெரிக்கா என்று அழைக்கப்படும் கத்தார், தமது தாராளமயமாக்கல் கொள்கையால் முதலீட்டாளர்களின் சொர்க்கமாகவும் திகழ்கிறது.
தற்போது, அரபு நாடுகள் கூட்டமைப்பான அரபு லீக்கின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் கத்தாருக்கு, அரபு எழுச்சியில் முக்கியப் பங்கு உண்டு. லிபியாவில் மும்மர் கடாஃபி தலைமையிலான அரசை அகற்றியதில் பின்னணியில் இருந்து செயல்பட்டது கத்தார். தற்போது, சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து உறுதியான பின்புலமாகவும் கத்தார் விளங்குகிறது. தாலிபன்களை தோகாவில் அலுவலகம் திறக்கச் செய்து, அவர்களை அரசியல் பாதையில் செலுத்த கத்தார் முயற்சிக்கிறது.
இவை தவிர, ஏமன், லெபனான், சோமாலியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளின் அன்றாட நடவடிக்கைகளை தீர்மானிப்பதிலும் கத்தார் முக்கிய பங்கு வகிக்கிறது. வளைகுடா நாடுகளில் அமைதியையும், அரசியல் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த விரும்பும் நாடுகள், கத்தாரின் ஒத்துழைப்பைப் பெற்றே தீர வேண்டும் என்பதே இன்றைய நிலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக