கோவா தலைநகர் பனாஜியில் பாஜகவின் 3 நாள் தேசிய செயற் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ராஜ்நாத் சிங் முதல் முக்கிய தலைவர்கள் அனைவரும் கோவாவில், குழுமியிருக்கும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் எல்கே அத்வானி தம் வாழ்நாளில் முதன்முறையாக பாஜகவின் தேசிய செயற் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார்.
செயற்குழுவின் முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்க கோவா செல்வதற்கு தனி விமானம் தயாராக இருந்த போதும் அத்வானி செயற் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது பாஜகவின் உட்கட்சிப் பூசலை வெளிப் படுத்தியுள்ளது.
அத்வானி மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களான ஜஸ்வந்த் சிங், உமா பாரதி, யஸ்வந்த் சின்ஹா, வருண் காந்தி, மேனகா காந்தி, வினய் கத்தியார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பாஜகவின் தேசிய செயற்குழுவில் கலந்து கொள்ள வில்லை.
அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளாததற்கு பாஜக தரப்பில் உடல்நிலை காரணமாகக் கூறப் பட்டாலும் அதையும் தாண்டிய புனிதமாக மோடி வித்தை உள்ளதே முக்கியக் காரணமாகக் கூறப் படுகிறது. கோவா செயற் குழுக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பதவி உயர்வு அளிக்கும் விதமாக நாடாளுமன்ற தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பொறுப்பு வழங்கப் படும் என்ற எதிர்பார்ப்பே அத்வானி உள்ளிட்டவர்களின் திடீர் ''உடல்நலக் குறைவுக்கு'' காரணமாகக் கூறப் படுகிறது.
ராமர் கோவிலைக் கட்டுவோம் என்று கூறியே கட்சியை வளர்த்த அத்வானிக்கு பாஜகவில் நரேந்திர மோடிக்கு அளிக்கப் படும் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தாங்கிக் கொள்ள முடிய வில்லை. அதன் வெளிப் பாடே இந்த இந்த புறக்கணிப்பு. இதுவும் திடீர் புறக்கணிப்பு அல்ல. சில நாட்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அத்வானி ''குஜராத் வளர்ச்சி அடைந்த மாநிலம். அதை மேலும் முன்னேற்றியவர் நரேந்திர மோடி. ஆனால் பின் தங்கிய மத்தியப் பிரதேசத்தை முன்னேற்றிக் காட்டியவர் சிவ் ராஜ் சிங் சவுஹான். அந்த வகையில் நரேந்திர மோடியை விட சிவ் ராஜ் சிங் சவுஹான் தான் பெஸ்ட்'' என்று உண்மையை போட்டு உடைத்து இருந்தார்.
செயற்குழுவில் பங்கேற்கா விட்டாலும் அத்வானியின் பூரண ஆசி உண்டு என்று பாஜகவினர் கூறி வந்தாலும் அத்வானியின் பூரண ஆசி நரேந்திர மோடிக்கு இல்லை என்பதையே சில நிகழ்வுகளும் எடுத்துக் காட்டுகின்றன.
செயற்குழுவில் அத்வானி பங்கேற்க வில்லை என்று பாஜக தரப்பில் உறுதி செய்யப் பட்டதும் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் 30 பேர் டெல்லியில் உள்ள அத்வானியின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் பொதுச் செயலாளர் அசோக் சிங்காலும் இளம் தலைவர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என அத்வானியைச் சாடியுள்ளார்.
அத்வானியின் எதிர்ப்பை மீறி நரேந்திர மோடிக்கு மகுடம் சூடுவது பாஜகவில் பிளவை உண்டாக்கலாம் என எண்ணியோ என்னவோ, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நரேந்திர மோடியை நியமிக்கலாம் என சமரச யோசனை தெரிவித்து இருப்பதாகவும் ராஜ்நாத் சிங்கின் யோசனைக்கு அத்வானி சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனாலும் புதிய சமரசத் திட்டத்தை நரேந்திர மோடி ஏற்றுக் கொள்வாரா? என்பது தெரிய வில்லை. இதற்கிடையில், மோடியைத் தேர்வு செய்யவேண்டுமென ஆர்.எஸ்.எஸ் பாஜகவுக்கு அதிகார ஆலோசனை வேறு வழங்கி பீதியைக் கிளப்பியுள்ளது.
நரேந்திர மோடிக்கு ஒரு பொறுப்பை வழங்குவதிலேயே பாஜகவில் கருத்தொற்றுமை இல்லாத நிலையில் ஒட்டு மொத்த இந்தியாவே நரேந்திர மோடி பிரதமராக விரும்புவதாக கதை விடுவது கொஞ்சம் ஓவர் தான்.
2014 ல் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் களம் இறங்கியுள்ள பாஜகவுக்கு கோவாவில் நடைபெறும் பாஜக செயற் குழுவில் நரேந்திர மோடி குறித்து எடுக்கப் படும் முக்கிய முடிவே அதன் எதிர்காலத்தை பிளவுக்கு இட்டுச் செல்லுமா? அல்லது அரியணைக் கட்டிலில் அமர்த்துமா? என்பதை நிர்ணயிப்பதாக இருக்கக் கூடும்.
Source : inneram.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக