புதன், ஜூன் 05, 2013

சேது சமுத்திர திட்டத்தை பெயர் மாற்றியாவது நிறைவேற்றுங்கள்! கருணாநிதி வேண்டுகோள்!

தமிழக பொருளாதாரத்திற்கு வலுச் சேர்க்கும் சேது சமுத்திர திட்டத்தை கிடப்பில் போடாமல் ராமசந்திர மூர்த்தி திட்டம் என மாற்றியாவது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கலைஞரின் 90வது பிறந்த நாளையொட்டி தென்சென்னை தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசுகையில் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில்; “தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தை வளப்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். கருணாநிதி கொண்டு வந்த திட்டம் என்பதால் அதனை அங்கீகரிக்காமல் அழிக்கும் முயற்சியில் முதல்வரும், அவரை சார்ந்த அதிகாரிகளும் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் சேது சமுத்திர திட்டத்தை பல்வேறு காரணங்களை கூறி கிடப்பில் போட்டுள்ளனர். அத்துடன் உச்சநீதிமன்றத்துக்கும் சென்று இந்த திட்டம் தேவையில்லை என்று அறிவிக்கவும் கோருகின்றனர்.
தமிழர்களுக்கு வாழ்வு தரும் திட்டம், கப்பல்களுக்கு பயண நேரம் குறைவு, வாணிபம் பெருகும், ராமேசுவரம், மண்டபத்தில் சிறுதுறைமுகங்கள் வரும் போன்ற பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. இருந்தும் எதிர்க்கின்றனர். தமிழர்கள் வளம் சேர்க்கும் சேதுசமுத்திர திட்டம் வேண்டும்.
வேண்டுமானால் ராமசந்திர மூர்த்தி திட்டம் என்று சேதுசமுத்திர திட்டத்திற்கு பெயரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் திட்டம் தேவை, இதற்கு இன்றைய அரசு ஆவணம் செய்ய வேண்டும். செய்யும் என்று எதிர்பார்க்கிறேன். செய்யாவிட்டால் தி.மு.க. தன்னுடைய தோழமை கட்சிகளின் ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபடும் என்று இந்த அரசுக்கும், மத்திய அரசுக்கும் பிறந்தநாள் செய்தியாக தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கருணாநிதி கூறினார்.
Source : Newindia.tv

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக