திங்கள், ஜூன் 03, 2013

இஷ்ரத் போலி என்கவுண்டர்:போலீஸ்-ஐ.பி கூட்டுச் சதி!-முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி வாக்குமூலம்!

புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகள் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், போலீஸ்-ஐ.பி கூட்டுச் சதி என்று இவ்வழக்கில் கைதான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

2004-ஆம் ஆண்டு மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர் குஜராத்தில் வைத்து மோடியின் போலீசாரால் லஷ்கர்-இ-தய்யிபா இயக்கத்தைச் சார்ந்த, மோடியை கொல்ல வந்தவர்கள் என்று போலி நாடகமாடி அநியாயமாக போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சி.பி.ஐ வழக்கை விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர்களில் ஒருவர் கிரிஷ் சிங்கால். இவர் 2004-ஆம் ஆண்டு போலி என்கவுண்டர் சம்பவம் நடைபெறும்போது அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் எஸ்.பி யாக பணியாற்றியவர். இவர் சி.பி.ஐயிடம் போலி என்கவுண்டர் தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் தனது வாக்குமூலத்தில்,”குஜராத் மாநிலத்திற்கு பொறுப்பு வகித்த ஐ.பி(இண்டலிஜன்ஸ் பீரோ)யின் இணை இயக்குநர் ரஜீந்தர் குமாரும், அன்றைய அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் டி.ஜி.பி டி.ஜி.வன்சாராவும் இணை போலீஸ் கமிஷனர் பி.பி.பாண்டேவும் இணைந்து இச்சதித்திட்டத்தை வகுத்தனர்.” என்று தெரிவித்துள்ளார். முதல்வர் மோடியை கொலைச் செய்ய வந்த லஷ்கர்-இ-தய்யிபா உறுப்பினர்கள் என்ற தகவலை ஜோடித்து போலீசுக்கு வழங்கியவர் ரஜீந்தர் குமார் என்ற தகவலை கிரிஷ் சிங்கால் சி.பி.ஐயிடம் தெரிவித்திருந்தார்.
ரஜீந்தர குமார் தற்போது புதுடெல்லி ஐ.பி தலைமையகத்தில் பணியாற்றுகிறார்.அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டுள்ளது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பி.பி.பாண்டே தற்போது தலைமறைவாக உள்ளார். பாண்டேவுக்கு எதிராக சி.பி.ஐ நீதிமன்றம் ஜாமீன் இல்லா வாரண்டை பிறப்பித்திருந்தது.குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமறைவாக இருக்க குஜராத் அரசு அனுமதிப்பதாககடந்த மாதம் அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனிடையே தனது பெயரை முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்) சி.பி.ஐ சேர்த்ததை ரத்துச் செய்யக்கோரி பி.பி.பாண்டே உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்ஏற்பட்டதை தொடர்ந்து குஜராத் சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் கிரீஷ் சிங்காலுக்கு கடந்த 27-ஆம் தேதி ஜாமீன் வழங்கியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக