மாநிலங்களவைத் தேர்தல் - திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை சந்தித்து ம.ம.க. நிர்வாகிகள் ஆதரவைத் தெரிவித்தார்கள். தமிழ்நாட்டில் வரும் ஜூன் 27 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு முடிவு செய்து அறிவித்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை முடிவு செய்வதற்காக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயி அவர்கள் தலைமையில் இன்று (ஜூன் 19) காலை கட்சியின் தலைமையகத்தில் உயர்நிலைக் குழுக் கூட்டம் கூடியது. இதில் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, எஸ். ஹைதர் அலி, ப. அப்துல் ஸமது, ஒ.யூ.ரஹ்மதுல்லா, குணங்குடி ஆர்.எம்.அனிபா, எஸ்.எஸ். ஹாரூன் ரசீத், கோவை உமர் ஆகியோரும், சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் தொகுதி ம.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷாவும் பங்குகொண்டார்கள்.
இக்கூட்டத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அஇஅதிமுக சார்பாக ஆதரவு கேட்டு மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்களிடம் பின்வரும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
1. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும்.
2. கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும்.
3. பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அனைத்து தண்டனைக் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். கோவை சிறையில் கொடூர நோயால் பாதிக்கப்பட்டுள்ள அபூதாஹிர் நீதிமன்ற உத்தரவிற்கேற்ப விடுதலைச் செய்யப்பட வேண்டும்.
4. உருது உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளுக்கு பள்ளிக்கூடங்களில் பழைய நிலையை அளிக்க வேண்டும் உள்ளிட்ட சமுதாய ரீதியான கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அளித்த போதினும் அரசுத் தரப்பில் இருந்து உறுதியான உத்தரவாதங்கள் வராதது குறித்தும் உயர்நிலைக் குழு பரிசீலித்தது.
தேமுதிக மற்றும் திமுக தரப்பில் இருந்தும் நேரில் ஆதரவு கேட்டு வந்தது குறித்து விவாதிக்கப்பட்டது. அதிமுக மற்றும் சிபிஐ வேட்பாளர்கள் ஐவரும் உறுதியாக வெற்றிபெறும் நிலையில் மனிதநேய மக்கள் கடசி தனது வாக்கை வீணாக்காமல், வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ள திமுகவிற்கு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் மவ்லவி ஜே.எஸ். ரிபாயி அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார்கள். இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் ஸ்டாலின் மற்றும் மாநிலங்களவை வேட்பாளர் கனிமொழி ஆகியோரும் இருந்தார்கள்.
மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்ததுடன், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் மிஸ்ரா அறிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக திமுக தலைவர் வாக்களித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக