வியாழன், ஜூன் 20, 2013

பீகார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றி!

பாஜக கூட்டணி விலகலையடுத்து பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது. 17 ஆண்டுகளாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணியில் இருந்து விலகியது.

இதையடுத்து, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து பா.ஜ.க.வும் வெளியேறியது. இதனைத் தொடர்ந்து, ஆளுநர் பாட்டீலை சந்தித்துப் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், தனது அரசுக்கான ஆதரவை நிரூபிப்பதாக உறுதியளித்தார். அதன்படி, இன்று பீகார் சட்டப்பேரவையில் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை நிதிஷ் குமார் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும் முன்னரே பா.ஜ.க உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் விவாத்திற்கு பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், நிதிஷ்குமார் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. 
காங்கிரஸ் ஆதரவு:
ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு 118 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் தேவைக்கும் அதிகமாக காங்கிரஸ், சிபிஐ மற்றும் 4 சுயேட்சைகளின் ஆதரவுடன் மொத்தம் 126 வாக்குகளை பெற்று நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக